டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’.
‘ரங்கூன்’ படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ஃபெரோஸ் பேசியதாவது,
“நிறைய ஹீரோக்களிடம் கதை சொல்லியிருக்கிறேன், எல்லாம் ஓகே ஆனாலும் படத்தைத் தொடங்கவே முடியவில்லை. அப்போது தான் படத்தை நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் தான் இந்த கதைக்கு வேண்டும் என முன்பே முடிவு செய்தேன், அது சாத்தியமானது.
தெரு சண்டையை மையமாகக் கொண்ட கதை என்பதால் ஸ்டண்ட் மாஸ்டரின் வேலை ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது, அதை அன்பறிவ் சிறப்பாக செய்து கொடுத்தனர். படத்தை முழுதாக பார்ப்பதற்கு முன்பே நம்பிக்கை வைத்து ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த ஆரா சினிமாஸ் மகேஷ் சாருக்கு நன்றி. படத்தை அவர் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன்.
நிறைய பேர் டீசர், டிரைலர் பார்த்து விட்டு ‘ஃபைட் கிளப்’ படத்தின் காப்பியா என கேட்கிறார்கள். இது தெரு சண்டையை மையமாக வைத்து சென்னையை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. சென்னை அண்ணா நகரில் நான் பார்த்த இரண்டு கேங் சண்டை போடுவார்கள், ஆனால், அவர்கள் எதிரிகள் கிடையாது. சண்டை முடித்து விட்டு நண்பர்களாக கிளம்பிச் செல்வார்கள், அதை நான் பார்த்திருக்கிறேன். அது தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்,” என்றார் இயக்குனர் ஃபெரோஸ்.
தயாரிப்பாளரும், நடிகையுமான விஜயலட்சுமி பேசுகையில்,
“நான் நடிக்கப் போகிறேன் என்று சொன்ன போது என் குடும்பத்தினர் உட்பட எல்லோரிடத்திலும் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், படம் தயாரிக்கப் போகிறேன் என்றதும் எல்லோரும் வேண்டாம் என அறிவுரை கூறினர். கிருஷ்ணா என் நண்பன், படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறான். கேரவன் கூட போகாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறான்.
இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களிடையே ஒரு பெரிய போட்டியே இருந்தது. ஒவ்வொருவரும் சிறப்பான, தரமான படமாக கொடுத்திருக்கிறார்கள். எங்களை விட ஆரா சினிமாஸ் மகேஷ் தான் மிகவும் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசை,” என்றார் தயாரிப்பாளர் விஜயலட்சுமி.
படத்தின் நாயகன் கிருஷ்ணா பேசும் போது,
“முதலில் ஃபெரோஸ் வேறு ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தமாகி இருந்தார். எனக்கு பொறாமையாக இருந்தது. அப்புறம் ஒரு நாள் விஜயலட்சுமி என்னை ஹீரோவாக நடிக்கக் கூப்பிட்டார். என் வாழ்க்கையில் முதல் முறையாக, முதல் பாதி கதையை இயக்குனர் ஃபெரோஸ் சொன்னார், இரண்டாம் பாதி கதையை தயாரிப்பாளர் விஜயலட்சுமி சொன்னார்.
சிக்ஸ் பேக் எதுவும் வைக்கத் தேவையில்லை என ஃபெரோஸ் சொன்னார். வழக்கமாக நடிப்பது மாதிரி நடிக்கக் கூடாது என என்னை ரொம்ப டார்ச்சர் செய்து விட்டார். விஷ்ணுவர்தனுக்கு பிறகு என்னை அதிகம் டார்ச்சர் செய்தது ஃபெரோஸ் தான். நாயகிகளுக்கு கண்கள் எப்போதுமே அழகு. ஆனந்திக்கும் அது பெரிய பிளஸ். மாயா வரைக்கும் மகேஷ் பல படங்களை சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த படத்தையும் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன்,” என்றார் நாயகன் கிருஷ்ணா.
இப்படத்தை வெளியிட உள்ள ஆரா சினிமாஸ் மகேஷ் பேசியதாவது,
“பண்டிகை’ படத்தின் போஸ்டர், மற்றும் டீசர் பார்த்தவுடன் தயாரிப்பாளரிடம் பேசி இந்தப் படத்துடன் என் பயணத்தை துவக்கினேன். படத்தை வாங்கும் போது யாரும் போட்டுக் காட்டத் தயங்குவார்கள். ஆனால் விஜயலக்ஷ்மி, ஃபெரோஸ் படத்தை போட்டுக் காட்டி, என் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டனர்.
கிருஷ்ணாவின் கேரியரில் ‘கழுகு, யாமிருக்க பயமேன்’ படங்கள் என்ன பெயரை பெற்றுத் தந்ததோ அதை இந்த படம் பெற்றுத் தரும். ஃபெரோஸ் ஒரு ஸ்டைலிஷ் இயக்குனர். அவர் எங்கள் பேனருக்கு அடுத்த படத்தை இயக்கித் தர வேண்டும். படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரித்த விஜயலட்சுமிக்குப் பாராட்டுக்கள். படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்ல எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம். படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம்,” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ்.
‘பண்டிகை’ வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் நிதின் சத்யா, நாயகி கயல் ஆனந்தி, எடிட்டர் பிரபாகர், கலை இயக்குனர் ரெமியன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் விக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.