‘அபியும் அனுவும்’ – இதுவரை சொல்லப்படாத காதல் கதை

தமிழ் சினிமாவின் காதல் பட வரிசைகளில் மற்றுமொரு காதல் திரைப்படமாக ‘அபியும் அனுவும்’ உருவாகி வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளரும், 1995ல் வெளிவந்த ‘பாட்டுப் பாடவா’ படத்தை இயக்கியவருமான பி.ஆர்.விஜயலட்சுமி இப்படத்தை மலையாளம், தமிழில் இயக்கி வருகிறார்.

மலையாளத் திரை உலகின் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்க, பியா பாஜ்பாய் நாயகியாக நடிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது,

“ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை இந்தப் படம். எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படம் ரிலீசாகும் போது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.

டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பாதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும்.

காதலை இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கையாண்டுள்ளோம். படத்தில் இருக்கும் அதிரடிகளை மேலும் உடைக்காமல், இது ரசிகர்களுக்கு சுவாரசியமான திருப்பங்களுடன் இருக்கும் ஒரு உணர்வுப்பூரமான காதல் கதையாக இருக்கும் என கூறிக்கொள்ள விரும்புகிறேன்,” என்கிறார்.

படத்தில் சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தரனின் இசையில், அகிலனின் ஒளிப்பதிவில், உதயபானு மகேஸ்வரனின் கதை மற்றும் திரைக்கதையில், சுனில் ஸ்ரீ நாயரின் படத்தொகுப்பு மற்றும் மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் ‘அபியும் அனுவும்’ உருவாகியுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.

இப்படத்தை சரிகம இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் சினிமா பேனரான யாட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Read Previous

‘குப்பத்து ராஜா’வாக ஜி.வி. பிரகாஷ்குமார்

Read Next

ரத்தம் சிந்தி உழைக்கும் ஸ்டன்ட் கலைஞர்கள் – ரஜினிகாந்த் பாராட்டு