தமிழ் சினிமாவில் தங்களுக்கென லட்சக் கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் ஹீரோக்கள் கமர்ஷியலான மசாலாப் படங்களில் நடிப்பதை மட்டுமே விருப்பமாக வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகிய மூவருக்கும் திரையுலகத்தில் மிகப் பெரும் வியாபாரமும், வசூலும் இருக்கிறது.
யு டியூப், சமூக வலைத்தளங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில் அவர்களது ‘பவர்’ என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் சிறந்த கதையை தேர்ந்தெடுப்பதை விரும்பாமல், நல்ல படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என நினைக்காமல் அவர்களது ரசிகர்கள் படத்திற்கு வந்தால் கைதட்டி, விசிலடித்து விட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாத படங்களில் கூட அவர்கள் நடித்திருக்கிறார்கள்.
அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக முன்னணி ஹீரோக்களுக்குள் இருக்கும் போட்டியில் வசூல்தான் முதலிடத்தில் இருக்கிறதே தவிர, படத்தின் கதைக்கும் காட்சிகளுக்கும் இல்லாமல் இருக்கிறது. அதில் முன்னணி ஹீரோக்கள் அனைவருமே ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.
அஜித், இயக்குனர் சிவா இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அஜித்தின் தோற்றத்திற்கும், அவருக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்புக்கு ஏற்ற விதத்தில் அவர் படங்களை இயக்கவில்லை என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. ‘வீரம், வேதாளம், விவேகம்’ ஆகியவை தரத்தின் அடிப்படையில் சுமாரான படங்கள் என்பதே உண்மை.
அஜித்திடம் இருந்து மிகச் சிறந்த படங்களை எதிர்பார்க்கும் அவருடைய ரசிகர்கள் அவர் வித்தியாசமான இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். ‘விவேகம்’ வெளியீட்டிற்கு முன்னதாக அஜித் – சிவா நான்காவதாக இணையப் போகிறார்கள் என்ற செய்தி வந்த போது அதிர்ச்சியானவர்கள் அஜித் ரசிகர்கள்தான்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் சிவா, அடுத்த படத்தையும் அஜித்தை நாயகனாக வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறது. அவரிடம் நிறைய கதைகள் சொல்லியுள்ளேன். அவருக்கு எந்தக் கதை பிடிக்கிறதோ அதை படமாக்குவோம். கண்டிப்பாக ‘விவேகம்’ படம் எப்படி வேறு ஒரு வகைப் படமாக இருந்ததோ, அதே போல அந்தப் படமும் ‘விவேகம்’ படத்திலிருந்து வேறு வகைப் படமாக இருக்கும். அப்படி ஒன்று அமைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அஜித் சார் தரப்பிலிருந்து அது அழகு, நான் அது பற்றி சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.
சிவா எதிர்பார்க்கும் அந்த அழகான அடுத்த பட அறிவிப்பை அஜித் வெளியிடுவாரா ?.