‘பிக் பாஸ்’ வீட்டில் ‘கதாநாயகன்’

‘பிக் பாஸ்’ வீட்டில் கதாநாயகன், கதாநாயகிகளை விட வில்லன்களும், வில்லிகளும்தான் அதிகம் இருக்கிறார்கள், அதாவது ஒருவர் பார்வைக்கு மற்றவர்.

அந்த வில்லத்தனங்கள் எல்லாம் இப்போது இல்லை என்பதுதான் பெரிய ஆறுதல். வெளியேறிப் போன ஜுலி, சக்தி, ஆர்த்தி ஆகியோர் மீண்டும் வந்து கூட பிக் பாஸ் வீடு கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் யார் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களே சொல்வார்கள்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனின் வயதான அப்பாவின் திடீர் நுழைவு அதிர்ச்சியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது. உறவுகளைக் கடந்து எதுவுமில்லை என்பதை விஜய் டிவி மீண்டும் ஒரு முறை அதன் நிகழ்ச்சியின் மூலம் நிரூபித்துவிட்டது. நாமும் என்னதான் விஜய் டிவியை அடிக்கடி திட்டிக் கொண்டேயிருந்தாலும் சமயங்களில் நம்மையும் அவர்கள் இப்படி வியக்க வைத்து விடுவார்கள்.

சினேகனுக்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான அந்த நெகிழ்ச்சியான சந்திப்பைப் பார்த்த பலரும் நிச்சயம் கண் கலங்கியிருப்பார்கள். நிகழ்ச்சியில் பேசும் போது அப்பாவை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார். எதனால் அவர் அப்படி இருந்தாரோ தெரியாது, இனிமேலும் அப்படி ஒரு தவறை அவர் செய்ய மாட்டார் என்று நம்புவோம்.

கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டில் திடீர், திடீர் விருந்தினர்கள் வந்து போட்டியாளர்களை திக்கு முக்காட வைத்து வந்தார்கள். அனைவரும் அவர்களது உறவினர்களாகவே, நண்பர்களாகவே இருந்தார்கள்.

நாளைய பிக் பாஸ் வீட்டிற்குள் நிஜமாகவே ஒரு கதாநாயகனும், கதாநாயகியும் விருந்தினர்களாக உள்ளே போகிறார்கள். அப்படியென்றால் சக்தியெல்லாம் யார் என்று நீங்கள் கேட்கக் கூடாது.

ஒரு படத்தை வாங்கி விட்டால் அதை எப்படி பிரமோஷன் செய்வது விஜய் டிவிக்குத் தெரியாதா என்ன ?. விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்துள்ள ‘கதாநாயகன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவிதான் வாங்கியிருக்கிறது.

அதனால், நாளைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விஷ்ணு விஷால், கேத்தரின் தெரேசா இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பிரமோஷன் படம் என ‘கதாநாயகன்’ படத்திற்கும் ஒரு பெருமை தான்.

Read Previous

நெருப்புடா விமர்சனம்

Read Next

அரசியல் ‘என்ட்ரி’, ரஜினிகாந்த், கமல்ஹாசன், யாருக்கு ஆதரவு அதிகம் !

Most Popular