கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’ஹர ஹர மகாதேவகி’.
ப்ளூ கோஸ்ட் புரொடக்ஷன்ஸ், தங்கம் சினிமாஸ் தங்கராஜ் இணைந்து தயாரிக்க சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் படம் ‘ஹர ஹர மகாதேவகி’.
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், ஆர்.கே. சுரேஷ், கருணாகரன், ராஜேந்திரன், ரவி மரியா, பாலசரவணன், நமோ நாராயணன், மயில்சாமி, மனோபாலா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கௌதம் கார்த்திக் பேசியதாவது,
“எல்லோரும் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்தக் கதை பலருக்குச் சென்று மீண்டும் என்னைத் தேடி வந்தது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களைத்தான் போட்டுக் காண்பித்தார்.
பாடல்களை நான் மிகவும் ரசித்து , சிரித்து கேட்டேன். பாடல்களைக் கேட்டதும் இந்தக் கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் கதையைக் கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன்.
என்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தை , நம்பிக்கையும் தந்தார். இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் ஹரஹர மகாதேவகி டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன். படத்தின் டைட்டிலை இயக்குனரே அறிவிப்பார்,” என்றார்.
விழாவில் நிக்கிகல்ராணி பேசியதாவது,
“டார்லிங் படத்தின் மூலம் என்னை தமிழில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் இந்தப் படத்தின் கதையைக் கேட்கும்படி கூறினார். இயக்குநர் சந்தோஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து கதை சொன்னார். கதையை கேட்டு சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.
சந்தோஷ் என்னிடம் கதை சொன்ன போது என்னுடைய போர்ஷனில் வரும் விஷயங்களை மட்டும் தான் கூறினார். இப்போது இங்கே வந்த பிறகு தான் கதை, திரைக்கதை , வசனம் என்று அனைத்தும் எனக்கு கொஞ்ச கொஞ்சமாகக் தெரிகிறது. அனைத்து நன்றாக உள்ளது.
கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல நண்பன். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தமிழ் சரியாக தெரியாததால், தமிழ் கற்றுக் கொடுத்தார். இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் பாடல்கள் அனைத்து கேட்க அருமையாக உள்ளது,” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,
“கௌதம் கார்த்திக்கை வைத்து எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தை ‘ஹரஹர மகாதேவகி’ இயக்குநர் சந்தோஷ் தான் இயக்குகிறார்,” என்றார் ஞானவேல் ராஜா.
இதைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கவுள்ள அப்படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என அறிவித்தார் இயக்குநர் சந்தோஷ்.
விரைவில் ‘ஹர ஹர மகாதேவகி’ படம் ரிலீஸ் ஆக உள்ளது.