தமிழ் சினிமாவில் தற்போது காமெடி என்று சொன்னால் அது அடுத்தவரை ‘கலாய்ப்பது’ என்பதாகத்தான் அதிகமாக இருக்கிறது.
வடிவேலு, சந்தானம் இருவரும் ஹீரோ ஆசையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதை விட்டு விட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
அதனால், நாமும் வேறு வழியில்லாமல் சதீஷ், பாலாஜி ஆகியோரின் காமெடி(?)களைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அவர்கள் செய்வதைப் பார்த்து சிரிக்கிறோமோ இல்லையோ இருவரும் தங்களை பெரிய காமெடி நடிகர்களாக நினைத்து டிவிட்டரில் தற்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்து அடுத்த வாரம் வெளிவர உள்ள ‘ஸ்பைடர்’ படத்தில் ஆர்.ஜே. பாலாஜியும் நடித்துள்ளார். அதன் பிரமோஷனின் ஒரு பகுதியாக நேற்று டிவிட்டரில் ரசிகர்களுடன் சாட் செய்தார்.
அப்போது ஒருவர் “உங்களுக்குப் பிடித்தமான காமெடி நடிகர்” யார் என்று கேட்டதற்கு ஆர்.ஜே. பாலாஜி, “சதீஷ், ப்ளீஸ் நம்புங்க,” என பதிலளித்தார்.
அதற்கு இன்று மதியம் சதீஷ், “ஹா..ஹா..ஜல்லிக்கட்டு பிரச்சனை சமயத்துல கடைசி நிமிஷத்துல நீங்க போட்ட வீடியோ காமெடிய விடவா….நம்புங்க ப்ளீஸ்,” என பதிலடி கொடுத்தார்.
சதீஷின் பதில் டிவீட்டிற்கு ஆர்.ஜே. பாலாஜி, “செம பன்ச், நல்ல காமெடி, இதுல பாதியையாவது படத்துலயும் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும், குட்லக் பட்ட்டி..”, என பதிலுக்கு கலாய்த்திருக்கிறார்.
தாங்கள் இருவரும் சிறந்த காமெடியர்கள் என நினைத்துக் கொண்டு இவர்கள் போட்டுக் கொள்ளும் இந்த சண்டைக்கு கமெண்ட் போடுபவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.
அவர்கள் இருவரையும் மாறி மாறி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள்.
குறிப்பு – சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி இருவரும் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் ‘வேலைக்காரன்’ படத்தில் ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.