ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில்….
படத்தின் இயக்குநர் ராஜ்பாபு
நான் மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறேன். திலீப், பிருத்விராஜ், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். தமிழ்ப் படத்தை இயக்கவேண்டும் என்று ஆசையிருந்தது. திரைக்கதையாசிரியர் ராஜேஷைத்தவிர டெக்னிசீயன்ஸ் எல்லாரும் புதியவர்கள். இவர்களின் சப்போர்ட் எனக்கு எப்படி கிடைக்கும் என்ற தயக்கம் முதலில் இருந்தது. மொழி வேறு பிரச்சினை. எனக்கு தமிழ் சரளமாகப் பேச வராது. ஆனால் கதை விவாதத்தின் போதே எல்லாம் டெக்னிசீயன்களின் சப்போர்ட் கிடைத்தது. இந்த படம் ஒரு கமர்சியல் பேமிலி எண்டர்டெயினராகத்தான் உருவாகியிருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், பொதுவாக படத்தின் திரைக்கதையை படமாக்கும் போது இந்த பாடல்காட்சி தேவையா ?, இந்த காட்சியில் நூறு துணை நடிகர்கள் தேவை என்று சொன்னால் ஐம்பது பேர் போதுமே? என்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மன்னு இதுவரைக்கும் படத்திற்கு என்ன தேவையோ அதற்கு ஃபுல் சப்போர்ட் செய்து வருகிறார். இதனாலேயே அவருக்கு நான் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து ஆதரவு தாருங்கள்.
படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத்
‘செய்’ என்னுடைய கேரியரில் முக்கியமான படம். இயக்குநர் மலையாளத்தில் பல படங்களை இயக்கியவர். கடின உழைப்பாளி. திரைக்கதை எழுதிய ராஜேஷ், என்னிடம் கதையை சொல்லும் போது தமிழில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, முழுவதும் மலையாளத்திலேயே சொல்லி முடித்தார். அதன் பிறகு யார் இதில் லீட் ரோல் செய்கிறார்கள் என்று கேட்டபோது, நகுல் என்று சொன்னார்கள். உடனே நான் பொருத்தமான தேர்வு என்றேன். துறுதுறுவென இருக்கும் கேரக்டர் அது. நகுலுக்கு இந்தப் படம் ஒரு மைல்கல் தான். ஹீரோயின் ஆஞ்சலுக்கு இது முதல் படம். ஆனாலும் முதல் படம் இல்லாமல் நல்ல அனுபவமிக்க நடிகையைப் போல் நடித்தார். தயாரிப்பாளர் மன்னு, படத்திற்காக நிறைய நேரங்களில் கமர்சியலாக சிந்திக்காமல், கிரியேட்டீவ்வாக சிந்தித்து சின்ன சின்ன ஐடியாக்களைக் கொடுத்து, இந்த படைப்பை தரமானதாக உயர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா
இந்தப் படத்தின் கதையை ராஜேஷ் மலையாளத்தில் சொல்லியதால், நான் சில வார்த்தைகளை மலையாளத்தில் பேசக் கற்றுக்கொண்டேன். அத்துடன் மலையாளத்தை புரிந்து கொள்ளவும் இந்த வாய்ப்பு பயன்பட்டது. இயக்குநருக்கும், திரைக்கதையாசிரியருக்கும் தமிழ் தெரியவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைத்தார்களோ அதனை துல்லியமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் மன்னு, இந்தப் படத்திற்காக பல விசயங்களை தேடித் தேடி கொண்டு வந்து சேர்த்து அருமையான படமாக உருவாக காரணமாகயிருந்தார். இது போல் ஆர்வமான தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு வரவேண்டும்.
நடிகை சந்திரிகா ரவி
நான் ஆஸ்திரேலியாவில் பிறந்தேன். அமெரிக்காவில் தங்கி வேலை செய்கிறேன். இங்கு வந்து தங்கி, படத்தில் பணியாற்றுவதற்கு முதலில் சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் படக்குழுவினர் காட்டிய அக்கறையும், அன்பும் என்னை ஆச்சரியப்படுத்தியது. சந்தோஷமாக இருப்பதாக உணர்ந்தேன். இந்த படத்தில் அனைத்து வகையான உணர்வுகளும் இடம்பெற்றிருக்கிறது. இது ரசிகர்களுக்குப் பிடிக்கும். அதனால் அனைவருக்கு இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நடிகர் வெங்கட்
இது எனக்கு முதல் மேடை.ராஜேஷ் கே ராமன் தான் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்தார். ஆடிசன் கூட செய்யவில்லை.இருந்தாலும் என்னை நம்பி இந்த வாய்ப்பை அளித்தார். அதற்காக அவருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் உடனே இயக்குநர் பாராட்டுவார். இது எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.
நடிகை யமுனா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். ராஜேஷ் சார் இந்த கேரக்டரை நீ தான் செய்யவேண்டும் என்று சொன்னார். வித்தியாசமான கேரக்டர்
இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ்
எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு தமிழை கற்றுக் கொண்டு பேசுகிறேன். திரைக்கதை எழுதிய ராஜேஷ் சார் தான் என்னுடைய இசையைக் கேட்டு இந்த வாய்ப்பிற்காக பரிந்துரைத்தார். தயாரிப்பாளரும், இயக்குநரும் கேட்டு எனக்கு வாய்ப்பளித்தார்கள். மெலோடி, சூஃபி, ஃபாஸ்ட் பீட் என கலவையான பாடல்களை கொடுத்திருக்கிறேன். சோனு நிஹாம், ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன், பென்னி தயாள், ஆசிப் அலி போன்ற முன்னணி பாடகர்கள் என்னைப் போன்ற அறிமுக இசையமைப்பாளரின் ஆல்பத்தில் பாடியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு அனுமதியளித்த தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, யுகபாரதி, விவேக் ஆகியோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நா முத்துக்குமார் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவான பாடல்களுக்கு மிகப் பெரிய ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
நடிகை ஆஞ்சல்
எனக்கு இந்த திரைக்கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் டீஸருக்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு சந்தோஷமடைந்தேன். செய் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் பணியாற்றுவதற்காக வாய்ப்பளித்த படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்
தயாரிப்பாளர் மன்னு
ராஜேஷ் இந்தப் படத்தின் திரைக்கதையைச் சொல்லும் போது எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இதனை திரைப்படமாக உருவாக்குவதற்கு அருமையான குழுவினரை தயார் செய்தோம். இது எனக்கு வித்தியாசமான அனுபவமாகயிருந்தது. இந்தப் படத்தின் மூலம் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். கடுமையாக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன்
இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். தமிழில் திரைக்கதை எழுத வேண்டும் என்றவுடன் முதலில் மலையாளம் மற்றும் தமிழ் மொழிக்கான அகராதி ஒன்றை வாங்கி படித்தேன். அதன் பின்னர் தமிழில் கதையைச் சொல்ல முயன்ற போது, படத்தில் நடித்த அனைவரும், படக்குழுவினரும் தமிழில் சொல்லவேண்டாம், மலையாளத்திலேயே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டனர். மலையாளத்தில் பிரபலமான ஒரு பாடலின் பல்லவியே இப்படத்தின் சப்ஜெக்ட். மனதிற்கு பிடித்திருந்தால், அது நல்ல விசயம் என்றால், அதற்கு எந்தத் தடை வந்தாலும், அதனை எதிர்த்து செய்து முடி என்பதே இதன் கதை. ’ என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி
இந்தப் படத்தில் ‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் நிக்ஸ் புதுமுகமாக இருந்தாலும் அவரிடம் ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. அதனை அவர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சூஃபி பாடலே சாட்சி. இது போன்ற பாடலை கம்போசிங் செய்வது கடினம். அதனை நன்றாக செய்திருக்கிறார் நிக்ஸ். இதற்கு யுகபாரதியின் வரிகள் வலிமை சேர்த்திருக்கின்றன. பாடகர் பாடிய விதமும் அருமை. பாடலாசிரியர் விவேக், ஒரு ஃபாஸ்ட் பீட் ராப் பாடலுக்கு தமிழில் வார்த்தைகளை எழுதியிருக்கிறார், அது சவாலானது. அதனை எளிதாக செய்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் நான் எழுதிய பாடலின் பின்னணியை இயக்குநர் விவரிக்கும் போது, ஒரு நடிகனுக்கும் இயக்குநருக்கும் உள்ள அன்னியோன்யம் போல் ஒரு காதலருக்கும் காதலிக்கும் இருக்கிறது என்றார். காதலியை இயக்குநராகவும், காதலனை நடிகராகவும் கற்பனை செய்து பாடல் எழுதியிருக்கிறேன். இதனை படமாக்கிய விதமும் கவனம் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இந்த பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷலும், சோனு நிஹாமும் மொழியை சிதைக்காமல், சரியான உச்சரிப்புகளுடன் பாடியது, இந்த பாடல் மீது அவர்கள் காட்டிய அக்கறை தெரிகிறது. இந்த பாடல் பதிவின் போது மேற்பார்வையிட்ட கவிஞர் மீராவிற்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் நகுல் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும். நடிகர்கள் நடித்தாலும் ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் பின்னணியாக இருப்பவர்கள் எழுத்தாளர்கள் தான். அந்த வகையில் இந்த படத்திற்கு தூணாக இருந்த ராஜேஷ் கே ராமனுக்கு என்னுடைய வாழ்த்துகள். மொழியே தெரியாமல் ஒரு அகரமுதலியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு முழு நீள படத்திற்கு வசனம் எழுதிய அந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.
நடிகர் நகுல்
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடித்திருக்கும் படம் ‘செய்’. இதில் சரவெடி சரவணன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் இருக்கும் படம் இது. படத்தின் இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் பற்றி சொல்லவேண்டும் என்றால், முதலில் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. அவர் கம்போசிங் செய்த பாடலை கேட்டவுடனே நான் தீர்மானித்துவிட்டேன். இவர் வேற லெவலுக்கு உயர்வார் என்று தெரிந்தது.
யுகபாரதி எழுதிய, ‘ஊரெல்லாம் என் கட்அவுட் நிக்குமே.. பேப்பரெல்லாம் என்ன அச்சடிச்சி விக்குமே..’ எனத் தொடங்கும் பாடல் ஒரு ஆக்டரா என்னோட பேவரைட். ‘நடிகா நடிகா..’ எனத் தொடங்கும் பாடலை, 15000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து படமாக்கினார்கள். அந்தக் காட்சி படமாக்கப்படும் போது கடினமாக இருந்தது. ஆனால் காட்சியாக பார்க்கும் போது வியப்பாக இருந்தது. மனதிற்கு திருப்தியாக இருந்தது.
இயக்குநர் ராஜ்பாபு சார் ஸ்பாட்டில் என்ன தேவையோ அதை மனதிற்குள்ளேயே எடிட் செய்து படமாக்கியது அவரது அனுபவத்தை எடுத்துக் காட்டியது. படக்குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த விழாவிற்கு வி ஐ பி கள் என்று யாருமில்லை. படக்குழுவினரும் ஊடகங்களும் தான் இங்கு வி ஐ பி. இதற்காகவும் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவில் படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல் காட்சிகள் திரையிடப்பட்டன.