பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. சந்தோஷ்குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்திலிருந்து ‘இக்னோர் – IGNORE’ என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. யோகி பி, அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். பாடலை எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
புறக்கணிப்பு மற்றும் அவமானங்களை எதிர்கொள்ளும் ஒரு காவல்துறை அதிகாரி, அவற்றிலிருந்து மீண்டெழும் மன உறுதியை மையமாகக் கொண்டு ‘இக்னோர்’ பாடல் உருவாகியுள்ளது. ராப் இசையுடன் நாட்டுப்புற இசை மற்றும் பறை இசையும் இடம்பெற்றுள்ள இப்பாடல், எதிர்ப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கண்ணியமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்கொள்ளும்போது ஏற்படும் போராட்டங்களையும், அதன் மூலம் அவன் மக்களின் காவலனாக மாறும் சூழலையும் இப்படம் பேசுகிறது. ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் கதைக்களத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முதல் பாடல் வெளியாகியுள்ளது.