மம்முட்டி நடிக்கும் வரலாற்றுப் படம் ‘மாமாங்கம்’

காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பிள்ளி தயாரிக்க பத்மகுமார் இயக்கும் படம் ‘மாமாங்கம்’.

மம்முட்டி, உன்னி முகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

1680 ஆம் ஆண்டின் பின்னணியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பரத்புழா கரையில் திருநாவையாவில் நடக்கும் கலாச்சார விழாவைக் களமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜாமோரின் என்னும் மன்னனின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சாவேர்ஸ் எனும் ஒரு சிறு போராட்ட குழுவை மையமாகக் கொண்டது தான் “மாமாங்கம்” திரைப்படம்.

அக்குழுவில் அதுவரை எவராலும் சாதிக்க முடியாததை சாதித்த உண்மையான நாயகன், முடியாததை முடித்துக் காட்டி, வரலாற்றில் மறைக்கப்பட்ட மிகப் பெரும் போர் வீரனின் கதை இந்தப் படம். அவனின் வெற்றியை பெரும் பட்ஜெட்டில் சொல்லும் பிரமாண்ட படைப்பாக இப்படம் இருக்கும்.

மலையாளத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழிலும் டப்பிங் செய்ப்பட்டு வெளியாக உள்ளது. தமிழில் மம்முட்டியே பின்னணி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் பத்மகுமார் கூறுகையில்,

“மம்முட்டி சார் ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளைக் கடந்தது. இந்திய அளவில் மிகச் சிறந்த நடிகராக போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப் படங்களைத் தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.

தமிழ்ப் படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.

‘மாமாங்கம்’ படத்திற்குத் தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது. அதிலும் பழங்காலத் தமிழ் மொழியின் உச்சரிப்பை தன் குரலில் தமிழ் ரசிகர்களுக்காக பல முறை ரிகர்சல் செய்து டப்பிங் செய்துள்ளார்.

தமிழ் வசங்களை எழுதி , டப்பிங் பணிகளிலும் பேருதவியாய் இருந்த இயக்குநர் ராம் அவர்களுக்கு பெரும் நன்றி.

‘மாமாங்கம்’ படத்தினை ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

தமிழ் டீஸருக்கு கிடைத்த வரவேற்பு எங்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எந்த மொழியிலும் நல்ல கருத்துக்களை, நல்ல படங்களை ஆதரிப்பதில் தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னோடிகள். அவர்களது அன்பு இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

மாமாங்கம் – தமிழ் டீசர்

மாமாங்கம் – புகைப்படங்கள்…

Read Previous

ராய் லட்சுமி நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ – டீசர்

Read Next

பிகில் – மாதரே….பாடல் வரிகள் – வீடியோ…

Most Popular