குழந்தைகளும் கொண்டாடி ரசிக்க, வருகிறது ‘கூகுள் குட்டப்பா’…

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கல்லல் க்ளோபல் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனங்கள் தயாரித்திருக்கும் ‘கூகுள் குட்டப்பா’. 

கே.எஸ். ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன்,  பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. சரவணன், சபரி கிரிசன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைக்க, ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் இது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், பேரரசு, கௌரவ் நாராயணன், பொன் குமரன், கல்யாண், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டிரைலரை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர்வி உதயகுமார், பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் முக்கிய வேடத்தில் இடம் பெற்றிருக்கும் ரோபோ மேடையில் தோன்றி பெற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், 

“இயக்குனராக, நடிகராக இருந்த என்னை 'உலகநாயகன்' கமல்ஹாசன் தான் 'தெனாலி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் உதவி புரிந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கூகுள் குட்டப்பா’ படத்தை தயாரித்திருக்கிறேன். என்னிடம் உதவியாளராக பணியாற்றும் சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோருக்காக மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, ‘கூகுள் குட்டப்பா’வை உருவாக்கி இருக்கிறோம். 

என்னுடைய உதவியாளர்களாக இருந்தாலும், படப்பிடிப்பின்போது என்னை தயாரிப்பாளராகப் பார்க்காமல் நடிகராக வேலை வாங்கியது வியப்பை அளித்தது. அந்த ரோபோவை உருவாக்கி படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிட உதவிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்திற்காக தர்ஷன் மற்றும் லாஸ்லியா என புதுமுகங்களை இயக்குநர்கள் தேர்வு செய்ததும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது. சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பை நிறைவு செய்வதற்காக, என்னுடைய உதவியாளர்களாக இருந்து இயக்குநர்களாக அறிமுகமாகும் சபரி கிரிசன் மற்றும் சரவணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இயக்கிய ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகும் முன்னரே இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கி வருவது  மகிழ்ச்சியை அளிக்கிறது.

படத்தின் நாயகி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பணியாற்றும் பெண்ணாக ஏன் இருக்கக் கூடாது ? என்று கேட்டவுடன், இலங்கையில் பிறந்து தமிழை அழகாகப் பேசும் பிக் பாஸ் லாஸ்லியாவை படத்தின் நாயகியாக்கினோம்.  ‘கூகுள் குட்டப்பா‘ படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், விக்ரமனின் வாரிசு கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தைத் தயாரிக்கிறேன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.

படத்தின் இயக்குநர்கள் சபரி கிரிசன் மற்றும் சரவணன் பேசுகையில், 

''நானும் சரவணனும் நண்பர்கள். ஒரே அலைவரிசையில் சிந்திக்கக்கூடிய தோழர்கள். அதனால் இணைந்து ஒரு படத்தை இயக்குவோம் என தீர்மானித்தோம். நாங்கள் இருவரும் 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்' படத்தைப் பார்த்தபோது உண்மையில் வியந்தோம். இதனை தமிழில் ரீமேக் செய்யவும் தீர்மானித்தோம். முக்கியமான அந்த முதியவர் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்தபோது, சட்டென்று எங்களுடைய குருநாதர் கேஎஸ் ரவிக்குமார் நினைவுக்கு வர, அவர் முன்  நின்றோம். 

தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்து இருக்கிறீர்கள் எனக் கேட்டபோது, நாங்கள் செய்த மாற்றங்கள் குறித்து விவரித்தோம். உடனடியாக படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறிவிட்டார். அப்படித்தான் 'கூகுள் குட்டப்பா' தயாரானது. இதற்காக இந்தத் தருணத்தில் நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகி இருக்கிறார்.  பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா, அறிவு ஆகியோருக்கும், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர்,  கலை இயக்குனர் சிவா என உடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

யோகி பாபு காமெடியாக மட்டும் நடிக்காமல், சிறந்த குணச்சித்திர வேடத்திலும் நடித்திருக்கிறார். புதுமுக இயக்குநர்கள் என்றும் பாராமல் அவர் அளித்த ஒத்துழைப்பு மறக்க இயலாதது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விரும்பும் வகையில் குட்டப்பாவை வடிவமைத்து இருக்கிறோம். தர்ஷன், லாஸ்லியா என அனைவரும் இந்த படத்திற்காக தங்களுடைய கடின உழைப்பை அளித்திருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் 'கூகுள் குட்டப்பா'வின் திரைக்கதை அமைந்திருக்கிறது,'' என்றனர்.

நடிகர் தர்ஷன் பேசுகையில், 

''கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் தயாரிப்பில்  நாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து என்னைவிட என்னுடைய உறவினர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இயக்குநர்கள் எப்பொழுதெல்லாம் ஒத்திகைக்காக என்னை அழைத்தனரோ அப்போதெல்லாம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டோம். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மிக அருமையாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சுரேஷ் மேனனின் தீவிர ரசிகை என்னுடைய தாயார். அவருடன் நடித்த அனுபவங்கள் மறக்க இயலாது. யோகி பாபு, லாஸ்லியா, பூவையார் என உடன் நடித்த நடிகர் நடிகைகளிடம் படப்பிடிப்பு தளத்தில் நட்புடன் பழகியது மறக்க இயலாதது. இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

நடிகை லாஸ்லியா பேசுகையில், 

''கேஎஸ் ரவிக்குமார் சார், இயக்குநர், நடிகர் என்பதைக் கடந்து அற்புதமான அக்கறை செலுத்தும் மனிதர் என்பதை படப்பிடிப்பு தளங்களில் உணர்ந்திருக்கிறேன். அவருடன் திரையில் தோன்றும் வாய்ப்பு பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநர்கள் சபரி – சரவணன் இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக விளக்கி, என் திறமையை வெளிப்படுத்தினர். இது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. இயக்குநர்கள் ஒரு காட்சியை விளக்கி விட்டு, நீங்கள் உணர்ந்ததை பிரதிபலியுங்கள் என அனுமதி அளித்தனர். இதுவும் எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. சக நடிகரான தர்ஷன் என்னுடைய இனிய நண்பர்,'' என்றார்.‌

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,

''எந்திரன் படத்தில் தான் முதன்முதலாக ரோபோ என்னும் இயந்திரம், கதாபாத்திரமாக அறிமுகமானது. அந்தப் படம் இயந்திரத்திற்கும் மனித உணர்வு தொடர்பான உறவு குறித்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம். ஆனால் மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படம் பார்க்கும் பொழுது அந்த இயந்திரத்திற்கும், மனிதனுக்கும் இடையேயான உறவு மிகவும் நெகிழ்வாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. பொதுவாக மனிதருக்கும், செல்லப் பிராணிகளுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு இயந்திரத்திற்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவு என்பது வித்தியாசமானது. இலக்கணத்தில் இயந்திரம் ஒரு அஃறிணை பொருள். ஆனால் இந்த படத்தில் அது ஒரு உயிருள்ள பொருளாக இடம்பெற்றிருக்கும். இதனை பாடல் வரிகளில் ' … இதனை இனிமேல் இவன் என்பாயோ..' என குறிப்பிட்டிருக்கிறேன். இதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், ஜிப்ரானின் இசையும் உயிர்ப்புள்ளதாக இருக்கும். மேலும் இந்தப் படத்தில் எழுதிய ' ஈழத்து பூங்காற்றே..' என்ற பாடல் வரிகளுக்காக கவிப்பேரரசு வைரமுத்து என்னை அழைத்து பாராட்டு தெரிவித்தார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் கே.எஸ் ரவிக்குமார் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்,'' என்றார்.

Read Previous

‘மாயன்’ படம் அல்ல, ஒரு நிகழ்வு – இயக்குனர் ராஜேஷ் கண்ணன்

Read Next

‘குதிரைவால்’ என்ன சொல்லப் போகிறது ?

Most Popular