‘காந்தாரா’ படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு

'கேஜிஎஃப்' படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் 'காந்தாரா'. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ஐந்து மொழிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் தரமான படைப்புகள் வெளியானால், அதனைக் கண்டு ரசித்து படக்குழுவினரை நேரில் வரவழைத்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்து தெரிவித்து பாராட்டுவது நடிகர் ரஜினிகாந்தின் வழக்கம்.  

‘காந்தாரா’ படத்தைப் பார்த்து பிரமித்த ரஜினிகாந்த் டிவிட்டரில்,

“தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது. என்னை புல்லரிக்கச் செய்துவிட்டீர்கள் ரிஷப் ஷெட்டி. உங்கள் திரைக்கதை, இயக்கம், நடிப்புக்கு என் பாராட்டுகள். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படைப்பைத் தந்த அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

கர்நாடகாவில், வெளியான 'கேஜிஎஃப் 2' படத்தைப் பார்த்த பார்வையாளர்களை விட, 'காந்தாரா' படத்தைப் பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

தமிழ்நாட்டில் தீபாவளிக்குப் பிறகும் 100 திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

Read Previous

சர்தார் – கார்த்தியின் அர்ப்பணிப்பு, இயக்குனர் மித்ரன் பாராட்டு

Read Next

பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் “3.6.9” இசை வெளியீட்டு விழா

Most Popular