அப்புன்டு ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் ஆனந்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கமலி From நடுக்காவேரி‘-
ஒரு சராசரி பெண் தன்னுடைய கல்விப் பயணத்தை, அவரே அறிந்து கொள்ளும் ஒரு யதார்த்தப் படம்தான் இது.
படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது,
“இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்த விசயங்களைத்தான் திரைக்கதையாக மாற்றினேன்.
ஒரு வகையில் நான் ஆண் கமலி. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கப்டும் வரம்புகளைத் தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான் இப்படத்தின் கதை.
கிராமத்தில் இருந்துவந்து IIT-க்குள் நுழையும் பெண், அவளது வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் இந்தப்படம் பயணிக்கும்.
இப்போதும் கிராமப்புறங்களில் பென்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை. அதனை வெளிக்கொண்டு வரும் படைப்பாக இப்படம் இருக்கும்.
இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும்.
என் கதைக்கான பொருத்தமான நடிகையைத் தேடியபோது கயல் ஆனந்தி மிகச் சரியானவராகத் தோன்றினார். கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர். இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்லும். கண்டிப்பாக இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பைக் கண்டு பிரமிப்பார்கள்.
கோவை நக்கலைட்ஸ் சேனலின் மிகப்பெரிய ரசிகன் நான். முதலில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்திற்காக நடிகையைத் தேடியபோது, நக்கலைட்ஸில் உள்ள ஸ்ரீஜா நடிப்பு மிகவும் சரியாக இருக்கும் என தோன்றியது. அதனால் ஸ்ரீஜாவை நேர்காணல் செய்தோம், அப்போது ஸ்ரீஜாவுடன் அவர்களின் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் படத்தில் சின்ன கதாபாத்திரங்கள் உள்ளது, நடிக்க விருப்பம் உள்ளதா எனக் கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். சிறிய பாத்திரம் என்றாலும் மிகவும் சிறப்பாக அவர்களது பணியைச் செய்து கொடுத்தனர். நக்கலைட்ஸ் குழுவினர், அதி திறமைசாலிகள், அவர்கள் அனைவரும் இன்னும் நன்றாக வரவேண்டும்.
இப்படத்தில் நக்கலைட்ஸ் குழுவினர் ராஜேஷ், ஸ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பகுதியை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா உடைய உதவியாளர் லோகையன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார்.
தீனதயாளன் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப் படத்திற்கு மிகப் பொருத்தமான, அற்புத இசையை தந்திருக்கிறார்.
அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும். வரும் பிப்ரவரி 19 உலகம் முழுவதும் ஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது.