கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’.
இப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் இப்படத்திற்கான சான்றிதழை இன்னும் வழங்கவில்லை. அதை வழங்கக் கோரி சென்னை, உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பு நாளை ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இந்த அறிவிப்பை மன வருத்தத்துடன் பகிர்கிறோம். ஜனவரி 9 அன்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு, எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம், இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானது அல்ல.புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அதுவரை, உங்கள் பொறுமை மற்றும் தொடர்ந்த அன்பை தாழ்மையுடன் கோருகிறோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவு எங்கள் மிகப்பெரிய வலிமையாகவும், முழு ஜனநாயகன் குழுவிற்கும் அனைத்துமாகவும் இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
நாளை நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகுதான் படம் பற்றிய அடுத்த கட்ட நகர்வு இருக்கும் எனத் தெரிகிறது.