‘இந்தியன் 2’ பணிகளின் தாமதத்தினால் படத்தினை ஜூலையில் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. நீண்ட வருடங்களாக இந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது. மேலும், இதனை ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’ எனவும் பிரித்து படமாக்கி இருக்கிறது படக்குழு.
சில நாட்களுக்கு முன்பு ஜூனில் வெளியீடு என்று ‘இந்தியன் 2’ படக்குழு விளம்பரப்படுத்தியது. மேலும், ஜூன் 13-ம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்தது. ஆனால், எதிர்பார்த்தது போன்று படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிவடையவில்லை.
இதனால் படத்தினை ஜூலையில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் தேதியுடன் கூடிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இந்தியன் 2’ படத்தினை பொறுத்தவரை பெரிய பொருட்செலவில் உருவாகி இருந்தாலும், தொடர்ச்சியாக பல்வேறு தடங்கலினால் படக்குழு பெரும் சிக்கலில் இருக்கிறது.
‘இந்தியன் 2’ தாமதத்தினால், ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வெளியீட்டிலும் தாமதம் இருக்குமோ என்று தெலுங்கு திரையுலகினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.