தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் முக்கியமானவர் கௌதம் கார்த்திக். அவரது தாத்தா மறைந்த முத்துராமன், அப்பா கார்த்திக் நடித்த பல படங்கள் அந்தக் காலகட்ட ரசிகர்களுக்கு மறக்க முடியாதவை.
கடந்த சில மாதங்களாகவே, கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதைப் பற்றி இருவரும் எதுவும் சொல்லாமல் இருந்தனர்.
குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்தவர் மஞ்சிமா. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்ஐஆர்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
‘தேவராட்டம்’ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் வந்திருக்கலாம்.
செய்தியாக வலம் வந்த காதலை, இன்று மஞ்சிமா மோகன் முறைப்படி அறிவித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எல்லாவற்றையும் இழந்திருந்த போது, எனது வாழ்க்கையில் ஒரு பாதுகாவல தேவதை ஆக வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என புரிந்து கொள்ள உதவி செய்தாய்.
ஒவ்வொரு முறையும் நான் குழப்பத்தில் இருக்கும் போது என்னைத் தூக்கிவிட்டாய். என் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், நான் நானாக இருக்கவும் அடிக்கடி எனக்குக் கற்றுக் கொடுத்தாய். நான் யார் என்பதற்காக நீ என்னை எந்த அளவு நேசிக்கிறாய் என்பதுதான் நான் உன்னை நேசிப்பதற்கான சிறந்த விஷயம். நீ எப்போதும் எனக்குப் பிடித்த எல்லாமுமாய் இருப்பாய்,” என தனது காதல் அறிவிப்பில் கௌதம் கார்த்திக் பற்றி மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.
கௌதம் கார்த்திக் தங்களது காதலைப் பற்றி ஒரு நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார்.
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடிக்கு பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.