இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் படத் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘கனெக்ட்’.
‘மாயா, கேம் ஓவர்’ படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில், நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,
“2020ம் ஆண்டு கொரானா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் நடக்கும் கதை இது. வழக்கமான படங்கள் போல இரண்டு மணி நேரப் படமல்ல இது, மொத்த படமும் 95 நிமிடங்கள்தான். படத்தில் இடைவேளை கிடையாது, இது ஒரு பரிசோதனை முயற்சி தான்.
ஹாலிவுட் படங்களில் இடைவேளை இருக்காது. ஆனால், அந்த படங்கள் இங்கு வெளியாகும் போது, குறிப்பிட்ட நேரத்தில் படத்தை நிறுத்திவிட்டுத்தான் இடைவேளை விடுவார்கள். மூன்று மணி நேரப் படம் என்றால் அதற்கு இடைவேளை விடலாம். ஆனால், 95 நிமிட திரைப்படத்தை எந்தவித இடைவேளையும் இல்லாமல் பார்க்க முடியும், என்பது என் தனிப்பட்ட கருத்து.
95 நிமிட ஒரு ஹாரர் படத்தை இடையில் எந்த வித ‘கட்’டும் இல்லாமல் பார்த்தால் நிச்சயம் அது ரசிகர்களுக்குப் புதிய உணர்வை தரும் என்று தோன்றியது. அதனால் தான் இதை முயற்சித்தோம். இடைவேளை இல்லை என்றால் திரையரங்கங்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இது பற்றி அவர்களுடன் ஆலோசிக்கையில் அவர்களும் இந்த பரிசோதனை முயற்சியை செய்து பார்க்கலாம், என்று சொன்னார்கள். அது மட்டும் அல்ல, படம் 95 நிமிடம் என்பதாலும், இடைவேளை இல்லை என்பதால் கூடுதல் காட்சிகள் போடவும் வாய்ப்புள்ளது.
பேய்ப் படங்கள் நிறைய வருகிறது. நானே எடுத்திருக்கிறேன் ஆனால், மற்ற பேய் படங்களுக்கும் ‘கனெக்ட்’ படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக பேயை விரட்டுபவர்கள், நேரடியாக வந்துதான் அதை செய்வார்கள். ஆனால், இந்த கதை ஊரடங்கு சமயத்தில் நடப்பதால், ஆன்லைன் மூலமாக பேயை ஓட்ட முயற்சிப்பது புதிதாக இருக்கும். அந்த வேடத்தில் அனுபம்கெர் நடித்திருக்கிறார். அவர் இந்தக் கதையை கேட்டு நடிக்க சம்மதித்ததும், பாராட்டியதும் மறக்க முடியாது.
திகில் படங்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். பொதுவாக திகில் படங்கள் என்பது அனைவருக்கும் பிடித்தது தான். ஆனால், ஒரு முழுமையான திகில் படங்கள் இங்கு குறைவாகவே வருகிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய படத்தை முழுமையான திகில் படமாக எடுக்கிறேன். பேய் இருக்கிறதா ? இல்லையா ? என்ற கேள்விக்குள் நாம் போகக் கூடாது. பேய் என்றால் எல்லோருக்குள்ளும் ஒரு பயம் இருக்கும், அந்த பயத்தை திரையரங்கில் கூட்டமாக உட்கார்ந்து பொழுதுபோக்கும் ஒரு வடிவமாகவே திகில் படங்களை நான் பார்க்கிறேன்.
இப்படத்தில்15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படி ஒரு வேடத்தில் நடிக்க அவர் எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அவருக்குக் கதையும், கதாபாத்திரமும் தான் முக்கியம். மாயா படத்திலும் அப்படித்தான், அவர் கதையை மட்டுமே நம்பி நடித்தார். இந்த கதையும் நான் அவருக்காக எழுதவில்லை, கதையை எழுதிவிட்டு அவரிடம் கூறிய போது ஒகே நான் நடிக்கிறேன், என்று சொல்லிவிட்டார். படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்படும்.
ஊரடங்கில் நடக்கும் பேய் கதை, பேயை ஆன்லைன் மூலம் ஓட்ட முயற்சிப்பது போன்ற விஷ்யங்கள் ரசிகர்களுக்கு புதிய உணர்வைத் தரும். படத்தின் தொழில்நுட்ப பணிகள் மிகவும் பேசப்படும். படத்தை திரையரங்குகளில் பார்த்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அதனால், தான் திரையரங்கில் படத்தை வெளியிடுகிறோம்.
திகில் படங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல, ஆனால் என்னிடம் அதைத்தான் விரும்புகிறார்கள். அவர்களையும் குறை சொல்லவில்லை. ஆனால், திகில் படங்களைத் தவிர்த்து மற்ற வகைப்படங்களையும் நான் இயக்க விரும்புகிறேன், அதற்கான கதைகளும் என்னிடம் இருக்கிறது. நிச்சயம் அப்படிப்பட்ட படத்தை விரைவில் இயக்குவேன், என்று நம்புகிறேன்,” என்றார்.
டிசம்பர் 22ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட உள்ளார்கள்.