வேலையில்லாத இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்சனையை மையமாகக் கொண்ட எத்தனையோ கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், இந்தப் படம் இன்றைய காலத்து இளைஞர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் படமாகவும், அவர்களின் ரசனைக்கேற்ற படமமாகவும் அமைந்துள்ளது. தான் இயக்கிய முதல் படத்தையே வெற்றிப் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ். அருமையான குடும்பப் பின்னணியில் யதார்த்தமான சம்பவங்களுடன் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படமாக அமைந்துள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் அவர்களது நிஜ வாழ்க்கையை இந்தப் படத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள். ஒருவன் வாழ்க்கை நிலை எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை, அவனுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையை இந்தப் படம் தரும். நம் அனைவரது வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று பல விஷயங்கள் ஞாபகப்படுத்த வைக்கின்றன. இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கிறார் தனுஷ். ஆனால், அவருடைய தம்பி நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதிக்கிறார். அம்மா சரண்யாவின் செல்லப் பிள்ளையான தனுஷை, அவருடைய அப்பா சமுத்திரக்கனி எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டேயிருக்கிறார். தனுஷுக்கும் பக்கத்து வீட்டிற்கு குடி வரும் அமலா பாலுக்கும் காதல் மலர்கிறது. ஒரு நாள் திடீரென தனுஷின் அம்மா மாரடைப்பால் இறந்து போக, அப்பா சமுத்திரக்கனி இன்னும் அதிகமாக தனுஷை வெறுக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும், சுரபி ரூபத்தில் தனுஷுக்கு நல்ல வேலை கிடைக்கிறது. அந்த வேலையில் அவருக்கு வில்லனால் ஏற்படும் சவால்களை தனுஷ் எப்படி சமாளிக்கிறார். அவருடைய அப்பாவிடம் நல்ல பெயர் வாங்கினாரா, அமலா பாலுடனான காதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். தனுஷுக்கு மீண்டும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் படம். இப்படிப்பட்ட ஒரு படத்திற்காகத்தான் தனுஷ், இத்தனை நாட்களாக காத்திருந்தார் என எண்ண வைத்துவிட்டது. இப்படிப்பட்ட பக்கத்து வீட்டு பையன் மாதிரியான கதாபாத்திரங்களில்தான் தனுஷைப் பார்க்க ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். நகைச்சுவை, நக்கல், யதார்த்தமான நடிப்பு என அனைத்திலுமே தேசிய விருதுக்குப் பிறகு தனுஷின் நடிப்பு வேறு ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியே தொடருங்கள் தனுஷ்… அமலா பால் சினிமா நடிகை மாதிரி தெரியாமல், சீரியல் நடிகை மாதிரியும் தெரியாமல் பக்கத்து வீட்டு பெண் போலவே தெரிகிறார். தேவையற்ற கவர்ச்சி, கிளாமர் இல்லாமல் இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகையா என யோசிக்க வைக்கிறார். தடுமாற்றத்தில் இருக்கும் ஒருவனுக்கு ஆதரவுடன் கூடிய காதல் எப்படிப்பட்ட மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த முறை தனுஷுக்கு அம்மாவாக நடிப்பில் இன்னும் ஒரு படி மேலே ஏறியிருக்கிறார் சரண்யா. சமுத்திரக்கனி நடுத்தரக் குடும்பத்து அப்பாவாக, மகன்கள் எப்படியிருக்க வேண்டும் என்ற ஒரு சராசரி அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். சுரபி இடைவேளைக்குப் பின் வந்தாலும் கதைக்குத் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பளிச் சிரிப்பால் அதிகம் கவர்கிறார். தனுஷுடன் சேர்ந்து நடிக்கும் போது அதிகம் பேசாமல் சிரிக்க வைத்து விடுகிறார் விவேக். அனிருத் இசையில் இன்றைய இளைஞர்களைக் கவரும் விதமான பாடல்கள். அதிலும், அம்மா பாடல் உருக வைத்து விடுகிறது. இடைவேளை வரை அழகான யதார்த்த சினிமாவாகவும், இடைவேளைக்குப் பின்னர் விறுவிறுப்பான கமர்ஷியல் சினிமாவாகவும் அமைந்திருக்கிறது. வேலையில்லா பட்டதாரி – வெற்றிக் கோட்டை தொட்டாச்சி…