இந்தியாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சூர்யா…அடுத்த சர்ச்சை ஆரம்பம்…

anjaan audio launch

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை ஆளுக்கு ஆள் ஏலம் போட ஆரம்பித்து விட்டார்கள். சில வருடங்களுக்கு முன் இதே போன்று ஒரு சர்ச்சை எழுந்த போது ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான், வேறு யாரும் கிடையாது, என ஒரு வழியாக முடிவுக்கு வந்தார்கள்.

ஆனால், ஒரு வார இதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? என்ற கருத்துக் கணிப்பில் விஜய்தான், அடுத்த சூப்பர் ஸ்டார்…என்று மக்கள் கருதுவதாக தகவல் வெளியான பிறகு இந்த முறை ‘சூப்பர் ஸ்டார்’ சர்ச்சை ஒரு தொடர்கதையாகி விட்டது.

விஜய் அடுத்த மாதம் மதுரையில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக ஒரு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரையுலகில் மட்டும் இந்த பட்டப் பெயர்களுக்கு பஞ்சமில்லை என்பது ஆண்டாண்டு காலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் கூட சுப்ரீம் ஸ்டார் ஆக இருந்த சரத்குமார் புரட்சித் திலகம் என அவரது பட்டத்தை மாற்றிக் கொண்டார். இது நாள் வரை புரட்சித் திலகம் என்ற பட்டம் பாக்யராஜுக்கு சொந்தமாக இருந்தது.

சிலம்பரன் ‘யங் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைத் துறக்கிறேன் என்று சமீபத்தில் அறிவித்து விட்டார்.

இதனிடையே, இன்று காலை நடைபெற்ற ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சிலர் சூர்யாவை ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என அழைத்து ஒரு புது சர்ச்சையை உருவாக்கியுள்ளனர். பிரபல வினியோகஸ்தர் ஒருவர் சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றார். பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ‘அஞ்சான்’ படம் மூலம் சூர்யா இந்தியாவின் ஸ்டார் ஆகிவிட்டார் என்றார்.

‘அஞ்சான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வித்யுத் ஜமால், சூர்யாவைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்றே குறிப்பிட்டார். இவர் ஏற்கெனவே விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்திலும், அஜித் நடித்த  ‘பில்லா 2’ படத்திலும் வில்லனா நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முடிவில் இவர்களின் ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ பேச்சுக்கு சூர்யா ஏதாவது மறுப்பு தெரிவிப்பார், தேவையின்றி புது சர்ச்சையை சூர்யா உருவாக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்தது. சூர்யா, அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை.

ஆக, சூர்யாவுக்கும் ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தில் ஆவல் இருக்கிறது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.

இந்த ’சூப்பர் ஸ்டார்’  சர்ச்சை பற்றி தீவிர ரஜினி ரசிகர் ஒருவரிடம் நாம் பேசிய போது, “அது என்னங்க எல்லாருமே ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்துக்கு ஆசைப்படறாங்க, ‘மக்கள் திலகம், புரட்சித் தலைவர், நடிகர் திலகம்’ இந்த பட்டங்களுக்கு ஆசைப்பட மாட்றாங்க. எங்க ‘அடுத்த மக்கள் திலகம், அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம்’னு அவங்களைச் சொல்லச் சொல்லுங்க. தமிழ்நாட்டுல இருக்கிற மொத்த சினிமா ரசிகர்களுமே அவங்களை ஓரம்கட்டிடுவாங்க, ” என்றார்.

அவரது பேச்சில் நியாயம் இருப்பதாகவே நமக்குப்படுகிறது.

 

Read Previous

வேலையில்லா பட்டதாரி – விமர்சனம்

Read Next

சூப்பர் ஸ்டார் என்பவர் யார் ?