சூப்பர் ஸ்டார் என்பவர் யார் ?

salman khanமழை நின்றும் தூவானம் விடவில்லை என்ற கதையாக இந்த ‘சூப்பர் ஸ்டார்’ பஞ்சாயத்து தொடர்கதையாகி வருகிறது.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சைக்குப் பின், அதையும் மிஞ்சும் அளவிற்கு ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யா’ என நேற்று நடைபெற்ற ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழாவில் சிலர் கொளுத்திப் போட்டார்கள்.

இவர்களுக்கெல்லாம் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் இவ்வளவு சாதாரணமாகிப் போய்விட்டதா என ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் சிலர். திரையுலகில் அனுபவம் வாய்ந்த சிலரின் கருத்துக்களை நாம் கேட்டறிந்த போது ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு முழு தகுதியுடையவர் ரஜினிகாந்த் ஒருவரே என்று சொல்கிறார்கள்.

1980களில் ஆரம்பமான அவரது வெற்றி ஏறக்குறைய 34 வருடங்களாக தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். அவருடைய படம் பூஜை போட்ட அன்றே வியாபாரம் முடிவதும், வெளியான பின் வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்தது என்றும் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ போன்ற ஒரு சில திரைப்படங்களே விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தோல்விப் படங்களாக அமைந்ததே தவிர, பெரும்பாலான படங்கள் வாங்கியவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தன என்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில், இன்று வரை அவருடைய வெற்றி விகிதத்தையும், வசூல் விகிதத்தையும் யாரும் தொட முடியாமல் இருக்கும் போது தேவையில்லாமல் இப்படி ஒரு சர்ச்சையை எதற்கு தொடர்ந்து உருவாக்கி வருகிறார்கள் எனத் தெரியவில்லை.

சமீப காலத்தில் இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள் இவற்றின் வளர்ச்சியால் டிவி பக்கம் இருந்து வந்த சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோருக்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பும், இமேஜும் இன்றைய முன்னணி ஹீரோக்கள் சிலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்தே, அவர்களுடைய இமேஜை உயர்த்திக் கொள்ளும் விதத்தில் இப்படி ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கும், வேறு ஏதாவது ஒரு பரபரப்புக்கும் தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய அளவில் இன்று ஒரே சூப்பர் ஸ்டாராக சல்மான் கான் மட்டுமே விளங்கி வருகிறார். கடந்த சில வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுத் தந்துள்ளது என்கிறார்கள்.

சல்மான் கானின் சில படங்களின் உலக வசூல் விவரம்…

2010 – தபாங் –   215 கோடி

2011 – ரெடி – 184 கோடி

2011 – பாடிகார்ட் – 230 கோடி

2012 – ஏக் தா டைகர் – 345 கோடி

2012 – தபாங் 2 – 275 கோடி

2014 – ஜெய் ஹோ – 116 கோடி

 

அவரைப் போல் நம் ஹீரோக்களால் இந்த அளவிற்கு வசூலைப் பெற்றுத் தர முடியுமா ? அப்படி ஒரு வசூலைக் குவித்த பிறகு இவர்களும் தங்களை ‘சூப்பர் ஸ்டார்’   என்று தாராளமாக அழைத்துக் கொள்ளட்டும்.

 

Read Previous

இந்தியாவின் ‘சூப்பர் ஸ்டார்’ சூர்யா…அடுத்த சர்ச்சை ஆரம்பம்…

Read Next

இயக்குனரை காக்க வைத்து ஏமாற்றிய ஆர்யா…