‘டண்டணக்கா…’ பாடல்…டி.ராஜேந்தர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், அந்தப் பாடலைப் பாடிய இசையமைப்பாளர் அனிருத், பாடலாசிரியர் ரோகேஷ், தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

‘‘டண்டணக்கா…ணக்கா… ணக்கா’
எங்க தல டீயாரு
சென்டிமென்ட்ல தாறுமாறு
மைதிலி என்னைக் காதலின்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ணச் சொன்னாரு
மச்சான் – அங்க தான்டா
எங்க தல நின்னாரு…’’
– என்று துவங்கும் அந்தப் பாடலை இமான் இசையில் ரோகேஷ் எழுத அனிருத் பாடியிருந்தார். அந்தப் பாடல் யு டியூப் உள்ளிட்ட ஒலி வடிவத்தில் பல இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பட வெளியீட்டிற்கு முன்னரே பாடல் சூப்பர்ஹிட் ஆகி விட்டது.

இந்தப் பாடலால் டி.ராஜேந்தரின் தனி நபர் உரிமையும், காபிரைட் உரிமையும் மீறப்பட்டுள்ளது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம், அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் டி.ராஜேந்தரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள் என்றும் அவரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள் என்றும் டி.ஆர். தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக – பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி நடை – ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்கள்.

முறையான அனுமதியில்லாமல் டி.ஆர். பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும். மேலும் யூ ட்யூப், தொலைக்காட்சி உட்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் அந்தப் பாடல் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Read Previous

Kaaval – Official Teaser

Read Next

ஸ்ருதிஹாசன் மீதான தடை விலகும் ?