“ரா ரா, பூவா தலையா”, விரைவில் வெளிவர இருக்கும் ‘ஆவி குமார்’ போன்ற படங்களின் நாயகனான உதயா நாளை அவரது பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதற்கான பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார். மோகன் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து அவர் இந்த விஷயத்தை செய்துள்ளார்.
மோகன் ஃபவுண்டேஷன் நிறுவனம் உடல் உறுப்புகள் தானம் பற்றிய பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். 24 மணி நேர இலவச தொலைபேசி சேவையையும் செய்து வருகிறார்கள். அவர்களைப் பற்றியும் உதயா அறிமுகம் செய்து வைத்தார்.
கல்லூரி மாணவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றிய பல தகவல்களை மோகன் ஃபவுண்டேஷன் நிறுவனத்தினர் செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் தன்னுடைய அடுத்த படத்தின் தகவல்களையும் உதயா பகிர்ந்து கொண்டார்.
உதயா நடித்துள்ள நகைச்சுவை ஹாரர் படமான ‘ஆவி குமார்’ ஜுன் மாதம் வெளிவர உள்ளது. இந்தப் படத்தையடுத்து உதயா ‘உத்தரவு மகாராஜா’ என்ற முற்றிலும் வித்தியாசமான படம் ஒன்றில் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அறிமுக இயக்குனர் ஆசிப் இந்தப் படத்தை இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.