ஆஸ்கர் பிலிம்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் நேற்றுடன் 100வது நாளை வெற்றிகரமாகக் கடந்தது.
இந்த ஆண்டில் வெளிவந்து முதன் முதலில் 100வது நாளைக் கடந்த ஒரு வெற்றிப் படம் ‘ஐ’ மட்டுமே.
படம் வெளிவந்த சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்தது.
இதுவரை இந்தப் படம் மொத்தமாக 240 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80 கோடியும், ஆந்திரா, தெலுங்கானாவில் 50 கோடியும், கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்களில் 70 கோடியும், வெளிநாடுகளில் 55 கோடியும், ஆக மொத்தம் 255 கோடி ரூபாய் வசூலித்திருக்கலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை மட்டுமல்லாது படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை, இசை உரிமை ஆகியவற்றின் விலையான சுமார் 20 கோடி ரூபாயையும் சேர்த்தால் மொத்தம் 275 கோடி வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது.
தென்னிந்திய மொழிகளில் இரண்டாவது அதிகபட்ச வசூலை அள்ளிய படம் என்ற பெருமையை ‘ஐ’ படம் தட்டிச் சென்றுள்ளது.