கமல் சார் ஆசிரியர், நான் மாணவன் – ஜிப்ரான்

‘வாகை சூடவா’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே ‘சரசர சார காத்து…’ பாடல் மூல இசை ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர் ஜிப்ரான்.

தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இசையைமத்து மற்ற இசையமைப்பாளர்களையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க முடியுமா என பல வளரும் இசையமைப்பாளர்கள் ஏங்கி வரும் நிலையில் ஜிப்ரானுக்கு எளிதில் கிடைத்த வாய்ப்பு நிச்சயம் சிலரை பொறாமைப்பட வைத்திருக்கும். தொடர்ந்து ‘பாபநாசம், விஸ்வரூபம் 2’ படங்களுக்கும் ஜிப்ரான்தான் இசை என்பது அந்தப் பொறாமையை அதிகப்படுத்திதான் இருக்கும்.

கமல்ஹாசனுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி ஜிப்ரான் கூறியதாவது,

“கமல் சாரிடமிருந்து ஒரு ஏகலைவன் மாதிரிதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்தக் குறுகிய கால திரையுலக வாழ்க்கையை கமல்ஹாசனுக்கு முன் கமல்ஹாசனுக்குப் பின் என தாராளமாகப் பிரிக்கலாம்.

அவர் கூட இருக்கும் போது ஒரு ஆசிரியர் கிட்ட மாணவன் நல்ல பேர் வாங்க என்னலாம் பண்ணணும்னு நினைப்பானோ அப்படித்தான் நான் இருந்தேன்.

இந்தப் படத்துக்காக பாலியில இருந்து பல இசைக் கருவிகளை வரவைச்சி பயன்படுத்தினோம். அது எல்லாமே நல்லா வந்திருக்கு.

இரணியன் நாடகம் என்னுடைய அபிமான பாடல். இந்தப் பாடலுக்கு நிச்சயம் திரையரங்குல அற்புதமான வரவேற்பு கிடைக்கும்.

பாடல்கள்ல கமல் சாரோட நடனமும் நடிப்பும் அவ்வளவு பிரமிப்பா வந்திருக்கு. இந்தப் படத்துக்கு கம்போசிங் ஆரம்பிக்கும் போதே வழக்கமான இசைக் கருவிகள் இல்லாம, புதுசா டிரை பண்ணலாம்னு நிறைய பண்ணியிருக்கோம். 8வது நூற்றாண்டுல வர்ற சம்பவங்களுக்கு ரொம்பவே சுதந்திரமா இசையமைச்சேன். ஏன்னா, அப்ப என்ன மாதிரி இசைக் கருவிகள் இருந்ததுன்னு யாருக்குமே தெரியாது.

இந்தப் படத்துக்காக ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். அந்த உழைப்பு படத்துல கண்டிப்பா தெரியும்,” என கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்த பெருமிதத்துடன் சொல்கிறார் ஜிப்ரான்.

Read Previous

1500 திரையரங்குகளில் ‘உத்தம வில்லன்’…

Read Next

இயக்குனராக மாறும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி