ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இசைத்தட்டை வெளியிட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசினார்.
“இந்த ‘கிருமி’ படத்தைத் தயாரித்து இருக்கும் ரஜினி ஜெயராமன் என்னை கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார். அவர் சூப்பர்ஸ்டாருடன் நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர்.
நான் இயக்கிய 25 படங்களில் 20 படங்களில் ரஜினிக்கு உதவியாளராக இருந்தவர் இந்த ஜெயராமன் தான். நானும் சூப்பர் ஸ்டாரை வைத்து படங்கள் இயக்கியவன் என்கிற முறையில் அவரை உரிமையோடு வாழ்த்துகிறேன். அவர் சரியாக சம்பளம் கொடுத்ததாக எல்லாரும் கூறினார்கள். அப்போது எனக்கு ஏவிஎம், நாகிரெட்டி, ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் என எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அந்த நேர்மையான தயாரிப்பாளர்கள் வரிசையில் ஜெயராமனும் சேர வாழ்த்துகிறேன்.
நான் எழுபது படங்கள் இயக்கி இருக்கிறேன். சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து 25 படங்கள், கமலை வைத்து 10 படங்கள், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன்.
இவை எப்படி முடிந்தது, அந்தப் படங்கள் எல்லாம் எஸ்.பி முத்துராமன் என்கிற தனிப்பட்ட நபரின் வெற்றியல்ல, சாதனையல்ல. எல்லாமே எஸ் பி.எம். என்கிற படக்குழுவின் வெற்றி. நன்கு திட்டமிட்டு எடுத்ததால்தான் முடிந்தது. திட்டமிட்டு படமெடுத்தால் நஷ்டம் வராது ,வெற்றி நிச்சயம். இதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் கதை என்றார்கள். அவர் நமது பெருமையை உயர்த்தும்படி படம் எடுத்து இன்று பாராட்டைப் பெற்று வருகிறார். அவரது கதையை இயக்கியுள்ள அனுசரணையும் என்னையும் மிஞ்சி வாழ்க என வாழ்த்துகிறேன்,” என்றார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணைத்தலைவர்கள். பி.எல் தேனப்பன், கதிரேசன், தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், நடிகர்கள் விஜய் சேதுபதி, சார்லி, படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன், நடிகை வனிதா, பாடகர் கானாபாலா, இசையமைப்பாளர் கே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘கிருமி’ யை இயக்கியுள்ள அனுசரண், ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், பாடலாசிரியர் ஞானகரவேல், தயாரிப்பாளர்கள் ரஜினி ஜெயராமன், கோவை ஜெயராமன், பிருத்திவிராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக ‘கிருமி’யை இயக்கியுள்ள அனுசரண் நன்றி கூறினார். விழாவில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் ரஜினி மன்ற நிர்வாகிகளும் மட்டுமல்ல விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.