கெய்கர் பிலிம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இகோர் எழுத்து, இயக்கத்தில் சாம் டி ராஜ் இசையமைப்பில் தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், பிரியங்கா மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் ‘வந்தா மல’.
ஆர்யா, ரேணுகா மேனன், அக்ஷயா நடித்து 2006ம் ஆண்டில் வெளிவந்த ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கியவர்தான் இகோர். அப்போது இந்தப் படம் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்ட படமாக அமைந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 9 வருட இடைவெளிக்குப் பிறகு இகோர் இயக்கியுள்ள படம்தான் ‘வந்தா மல’. இந்தப் படத்தின் நாயகியாக ‘கங்காரு’ படத்தில் நடித்துள்ள பிரியங்கா மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளாராம். அவருக்கு மிகப் பெரும் பாராட்டுக்கள் காத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள உதயராஜ் இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் தமிழ், ஹிட்லர், பிரசாத் ஆகிய மூவர் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.
சாம் டி ராஜ் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் படத்திற்கு பக்கபலம் என்கிறார் இயக்குனர் இகோர். “புதுமுகங்களை வைத்து இந்தக் காலத்தில் படத்தை எடுப்பது சாதாரண விஷயமல்ல. சென்னைப் பின்னணியில் வெளிவந்துள்ள படங்கள் மிகவும் குறைவு. இந்தப் படத்தின் கதை அப்படியே சென்னைப் பின்னணியில் அழகாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்காக சேத்துப்பட்டு பகுதியை அவ்வளவு யதார்த்தமாக காட்டியிருக்கிறோம். நிச்சயம் வித்தியாசமான படங்களின் வரிசையில் இந்தப் படமும் பேசப்படும்,” என்கிறார் இகோர்.
‘வந்தா மல’ நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.