சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ படத்தை சிலர் சதி வேலை செய்து வெளிவராமல் தடுக்கிறார்கள் என கடந்த மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறினார்.
கடந்த வாரம் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதும் மீண்டும் அதையே கூறினார். சமயம் வரும் போது சதி வேலை செய்தது யார் என்பதை வெளியிடுவேன் என்று டி.ஆர். கூறியிருந்தார்.
‘வாலு’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று மாலை படத்தின் இயக்குனர் விஜய் சந்தர், இசையமைப்பாளர் தமன், டி.ராஜேந்தர், சிம்பு ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி கூறினர்.
அப்போது பேசிய சிம்பு, “வாலு’ படத்திற்கான தாமதத்திற்கு நானே காரணம், அதை நானே ஏற்றுக் கொள்கிறேன். படத்தைத் யார் தடுத்தார்கள் என்றெல்லாம் கேட்க வேண்டாம். யார் மீதும் பழி சொல்ல நான் விரும்பவில்லை, அதற்கான காரணத்தை நானே ஏற்றுக் கொள்கிறேன்.
ரஜினிகாந்தைச் சந்தித்த போது எனக்கு ஆலோசனை கூறினார். மூன்று ஆண்டுகள் கழித்து படம் வந்தாலும் எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அதை அப்படியே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் சொன்னார்.
என்னுடைய அடுத்த படமாக ‘இது நம்ம ஆளு’ வெளிவரும். அதற்கடுத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படமும், அதன் பின் ‘கான்’ படமும் வெளிவரும். ‘வேட்டை மன்னன்’ படத்தை 65 சதவீதம் முடித்து விட்டோம்.
‘வேட்டை மன்னன்’ படத்திற்காக ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து படத்தின் தயாரிப்பாளரைக் காப்பாற்றவே, ‘வாலு’ படத்தை அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருடைய தயாரிப்பில் நடித்தேன். ‘வாலு’ படத்தை அவரே தயாரித்தால், பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டு வருவார் என்று அவர் சொன்னதால் அந்த உதவியைச் செய்தேன்.
இனி, எந்த இடைவெளியும் இல்லாமல் வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்கள் நடிக்கும் முடிவில் இருக்கிறேன். அதற்கேற்றபடிதான் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன்.
என் படத்திற்காக இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்த என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி,” என சிம்பு பேசினார்.