நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள ‘49 ஓ’ திரைப்படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது. தான் நடிக்கும் ஒரு படத்தின் விழாவில் கவுண்டமணி கலந்து கொண்டார் என்ற பெருமையை இந்தப் படம் கடந்த வாரம் பெற்றது.
கடந்த வாரம் நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசை விழாவில் கவுண்டமணி கலந்து கொண்டு விவசாயிகளின் உழைப்பைப் பற்றியும், விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.
நாளை மறுநாள் வெளியாக உள்ள இந்தப் படத்தை, இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவியாளராக பணியாற்றிய ஆரோக்கிய தாஸ் இயக்கி இயக்குனராக அறிமுகமாகிறார். விவசாயம் மேல் தான் கொண்டு இருக்கும் அன்பையும் கவுண்டமணியுடன் தான் பணியாற்றிய அனுபவத்தையும் பற்றி அவர் கூறுகையில்,
‘‘நான் கிராமிய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன். ஒவ்வொரு விவசாயியின் வாழ்வாதாரப் பிரச்சினையை கண் எதிரே கண்டவன். சமுதாயத்தில் விவசாயி எப்பொழுதும் பின் தங்கியவனாகவே இருக்கிறான்.
அதற்கு காரணம் சமுதாயமா, அரசியலா , பொருளாதாரமா என்ற ஐயம் என் நெஞ்சை அரித்துக் கொண்டே இருக்கும். இதைப் பற்றிப் படம் எடுக்க முடிவு செய்த போதே அதன் அடிப்படை நையாண்டியாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.
ஒரு மாபெரும் படையை விட ஒரு நேர்மையானவின் நாக்கும் அவனது நையாண்டியும் பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்தவன் நான். அத்தகைய ஒரு பாத்திரப் படைப்புக்கு கவுண்டமணி சாரை விட பொருத்தமானவர் யார் ?. திரைக்கு அப்பாற்பட்டு அவருக்குள் இருக்கும் சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும் , விழிப்புணர்ச்சியும் வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே படம் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலனுக்கு பல கோடி நன்றி. இப்படம் நிச்சயம் ஒரு சிறப்பு மிக்க படமாக அமையும்,” என்கிறார் இயக்குனர் ஆரோக்கியதாஸ்.