ஈட்டி – மயக்கம் வந்தும் நடித்த அதர்வா

குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் செராபின் ராய சேவியர் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் அதர்வா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் ‘ஈட்டி’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை, கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் அதர்வா , நாயகி ஸ்ரீ திவ்யா , படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன், செராபின் ராய சேவியர் , இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சரவணன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, கதிரேசன் , தேனப்பன் பி.எல், கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் நாயகன் அதர்வா பேசியதாவது,

“இந்தப் படத்தின் கதையை தாணு சார் தான் முதலில் எனக்கு அனுப்பி வைத்தார். கதையை படித்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. இந்த கதைக்கு பின்னால் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கிறார் என்பதலேயே நான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

ரவி அரசு மிகச் சிறந்த இயக்குநர். இப்படத்தில் சிறந்த நடிப்பைக் கொடுப்பதற்காக நான் என்னுடைய முயற்சிகளில் உறுதியாக இருந்தேன். மேலும் இந்தப் படத்துக்காக மிக பெரிய அளவில் உணவு கட்டுபாட்டு முறையை கடைபிடித்து வந்தேன். அதனாலேயே எனக்கு படபிடிப்பு தளத்தில் அடிக்கடி மயக்கம் வரும்.

எனக்கு சில நேரங்களில் கண் மங்கலாகத் தெரியும். எதிரில் என்ன இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. கேமராவைக் கூட நான் தேடிக் கொண்டு தான் இருப்பேன். அந்த நேரங்களில் நான் ஏதாவது ஒரு திசையை நோக்கி நடிக்கிறேன், நீங்கள் அதைப் படம் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவேன்.

‘பாக் மில்கா பாக்’ படத்தில் நடிகர் இயக்குநர் பர்ஹான் அக்தர் அவர்களின் நடிப்பைப் பார்த்து நான் மிரண்டு விட்டேன். அவருடைய நடிப்புதான் இந்த படத்தில் நான் நடிக்க மிகப் பெரிய பலமாக இருந்தது. பாக் மில்கா பாக் படம் தான், நான் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைக்க என்னுள் வெறியை உண்டாக்கியது,” என்றார் அதர்வா.

Read Previous

ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கெத்து

Read Next

‘உப்பு கருவாடு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்