தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன.
நடிகர் சங்கத் தேர்தலில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக நடிகர்களுக்குள் பிரிவினை வந்து விடுமோ என்று அச்சப்பட்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்தியத் திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவை விடுத்துள்ள கூட்டறிக்கையில் வரும 10ம் தேதி சனிக்கிழமை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு அணிகளையும் அழைத்து சுமூகமான உடன்பாடு ஏற்பட வைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், எந்த உடன்பாட்டிற்கும் வரப் போவதில்லை எனவும் ஜனநாயக முறைப்படத் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பலர் சார்ந்த பாண்டவர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து , மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.
தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் , தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் , தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால் இந்தத் தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டுவிடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்த பயத்திற்கு சில விளக்கம் அளிப்பது எங்களது கடமையாக நினைக்கிறோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று குறைந்த பட்சம் 27 சங்கங்கள் இருக்கிறது. அனைத்து சங்கத்திற்கும் 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்று வரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கூட கடந்த முறை தேர்தல் நடந்த போது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி , அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள் ! ஒற்றுமையாகவும் இருக்குறீர்கள் !. இப்படி , உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயகத் தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது ?.
நடிகர் சங்கத் தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதிப் பட்டியலும் தயாராகிவிட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான அந்த மனுவவை தேர்தல் அதிகாரி அனுப்பவுள்ள நிலையில் , பாண்டவர் அணியால் மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டுவிடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது .
இந்தக் கருத்தை எங்களிடம் சொல்வதைவிட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால், நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்ப்போம்.
இந்தத் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசி வரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம். இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி,” என பாண்டவர் அணி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.