இளம் திறமைசாலிகளால் தமிழிலும் பல தரமான குறும்படங்கள் கடந்த சில வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எண்ணற்ற இளம் படைப்பாளிகளை இப்படிப்பட்ட குறும்படங்கள் சரியாக அடையாளம் காட்டி வருகின்றன. அவற்றில், சில குறும்படங்கள் சர்வதேச அளவிலும் விருதுகளைக் குவிக்கும் படங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படமாக ‘The Yellow Festival’ – மஞ்சள் நீராட்டு விழா படம் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற தெற்கு டெக்சாஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைகக்கான விருது, நியூயார்க்கில் நடைபெற்ற ஹார்லெம் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த குறும் படத்திற்கான விருது, மும்பையில் நடைபெற்ற இந்தியன் சினி சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருது, சிம்லாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழால் சிறந்த இயக்குனருக்கான விருது, ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருது என இந்தப் படம் பல விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. 56 திரைப்படங்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இந்தக் குறும்படம் தங்க யானை விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் சேது இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையமைப்பில் இம்ரான் அகமது ஒளிப்பதிவில், பி.லெனின் படத் தொகுப்பில், தபஸ் நாயக் ஒலியமைப்பில், வீரமணியின் கலை இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
‘மஞ்சள் நீராட்டு விழா‘ பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. இந்த உலகில் ஒரு குந்தையாகப் பிறந்து, குறும்புத்தனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாகப் பரிமாணம் அடையும் அற்புதத் தருணத்தை, நமது கலாச்சாரம் பெண்ணை சீர்படுத்தி, பக்குவப்படுத்தி, அழகுபடுத்தி, அவர்களுக்குக் கொடுக்கும் முதல் மரியாதைதான் இந்த ‘மஞ்சள் நீராட்டு விழா’.
நேகா மேனன், பாரதி கண்ணன், தீபா சங்கர், ரங்கம்மா பாட்டி, பிரேமா பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.