காதல் காலம் – பாக்யராஜுக்கு மகிழ்ச்சி தந்த தயாரிப்பாளர்

தமிழ்க்கொடி பிலிம்ஸ் வெப்படை ஜி செல்வராஜ் தயாரிப்பில் உருவான ‘காதல் காலம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை, ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

இசையமைப்பாளர் ஜெயானந்தன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட அவரது சிஷ்யர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார்.

இப் படத்தை இயக்கியவரான பாக்யராஜிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்தைப பற்றிக் கேள்விப்பட்ட கமல்ஹாசன் படக் குழுவினரை தமது அலுவலகத்துக்கே வர வழைத்து படத்தின் டிரையலரை வெளியிட்டுப் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாண்டியராஜன் , “இந்த விழா பல நாட்கள் தள்ளிப் போய் இன்று நடைபெறுகிறது. தாமதமும் நல்லது தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். நான் இயக்குனரிடம் (பாக்யராஜிடம்) உதவியாளராகப் பணியாற்றிய போது அவரது எல்லாப் படங்களுக்கும் எம் ஜி ஆர் வந்துவிடுவார். அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன். கடைசியில் ஒருவழியாக எடுத்துவிட்டேன். எனக்கு இந்தப் பக்கம் எம்ஜிஆர் அந்தப் பக்கம் டைரக்டர். எல்லோரும் பார்த்துப் பார்த்துப் பொறாமைப்பட்ட அந்தப் புகைப்படத்தை கடைசியில் யாரோ திருடி விட்டார்கள்.

அதன் பிறகு , நான் இயக்கிய கன்னிராசி பட விழாவில் கலந்து கொண்டதோடு எனது திருமண விழாவிற்கும் எம்ஜிஆர் வந்திருந்தார். எனது கையப்பிடித்துக் கொண்டு முத்தம் கொடுத்த வீடியோவெல்லாம் இருக்கு. போட்டோவைத்தான் மிஸ் பண்ணினேன் ஆனால் வீடியோவே கிடைத்து. அதுபோல இந்தப் படத்தை இயக்கிய சோமசுந்தராவும் மிகவும் தாமதமாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இருந்தாலும் மிகப் பெரிய வெற்றி பெறுவார்,” என்றார் பாண்டியராஜன்.

ஆடியோவை வெளியிட்டுப் பேசிய கே.பாக்யராஜ், “பாரதி சோமு என்று அழைக்கப்படும் சோமசுந்தரா மிகக் கடினமான உழைப்பாளி. எழுத்தாளராக இருந்து பத்திரிகையாளராக மாறி இன்று இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பாக்யராஜ் படத்தை பார்த்தது மாதிரியே இருக்கிறது என்று சொன்னார்களாம், அது தான் குருவுக்கும் பெருமை. அதைப் போல எனது அனுமதி இல்லாமலேயே முதல் நாள் கிளாப் போர்டைத் தூக்கிட்டு வந்த பாண்டியராஜனை நான் திட்டி ஓரமாக நிற்க வைத்தேன். அன்று முழுவதும் ஓரமாகவே நின்று கொண்டிருந்தவரைப் பின்பு உதவியாளராகச் சேர்த்துக் கொண்டேன்.

இன்று நிகழ்ச்சிக்கு அவர் வரும் வரை நான் காத்திருக்க வேண்டியதாகிப் போய் விட்டது. எதற்குச் சொல்கிறேன் என்றால் எனது உதவியாளர்கள் வளர்வதில் எனக்குப் பெருமைதான். எனது காம்பவுண்டுக்குள் வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இயக்குநராகி விட்டார்கள்.

வயல்வெளிகள் சூழ்ந்த கோபியில் நான் தான் முதன் முதலில் கேமராவை வைத்தேன். அதே இடத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அதே மாதிரி இந்தப் படத்தின் தயாரிப்பாளர், கோபி அருகே உள்ள குக்கிராமமான சிறுவலூரில் இருந்து வந்து, தான் சம்பாதித்த பணத்தை நண்பருக்காக முதலீடு செய்திருக்கிறார். நான் டுரிங் கொட்டகையில் படம் பார்த்த ஊரிலிருந்து ஒரு தயாரிப்பாளர் வந்திருப்பதில் மகிழ்ச்சி,”என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கூறும் போது,“ஒருவன் என்னதான் சொத்து பத்து வைத்திருந்தாலும் , கல்யாணத்திற்குப் பொண்ணு கேட்டுப் போனால் , பையன் என்ன பண்ணுகிறான் என்றுதான் கேட்பார்கள். அந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை தான் இந்தப் படம். காதல், சென்டிமென்ட் , நல்ல இசை, பாடல்கள் என்று விறுவிறுப்பாக படம் வந்திருக்கிறது,” என்றார்.

இந்தப் படத்திற்காக பா.விஜய், நா.முத்துக்குமார் மற்றும் சிநேகன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் ‘காதல் காலம்’ படத்தின் புதுமுகங்கள் நாயகன் சந்துரு, நாயகிகள் நித்யா ஷெட்டி, சார்வி செக்கூரி , ஒளிப்பதிவாளர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார், அரவிந்த், ஷெரீப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காதலுடன் அட்டகாசமான கருத்தையும் இன்றைய இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லும் ‘காதல் காலம்’ நிச்சயமாக ஒட்டு மொத்த திரை ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான படமாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Read Previous

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் பற்றி மனம் திறந்த மோகன்லால்

Read Next

விஜயகாந்த் மகனின் ‘சென்னை ஸ்மாஷர்ஸ் அணி’ அறிமுகம்