‘தாரை தப்பட்டை’ எனக்கொரு வாழ்க்கை – வரலட்சுமி

இயக்குனர் பாலாவின் படத்தில் நடித்த நடிகர்களுக்கு மட்டும் அவர்களது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை வந்ததில்லை. நடிகைகளுக்கும் மிகப் பெரிய பெயரும், திருப்பு முனையும் கிடைத்துள்ளது.

அந்த விதத்தில் தமிழில் தன்னுடைய இரண்டாவது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தில் ‘சூறாவளி’ என்ற வித்தியாசமான பெயர் கொண்ட கரகாட்டப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு திரையுலக வாழ்க்கை ஆரம்பமாகக் காரணமாக இருக்கும் என்கிறார் நாயகியாக நடித்துள்ள வரலட்சுமி.

“தாரை தப்பட்டை’ படத்துல நடிக்கிறதுக்காக என்னை யாருமே சிபாரிசு பண்ணலை. ‘பரதேசி’ படத்தோட ரீ-ரிக்கார்டிங் நடக்கும் போது, ‘பிதாமகன்’ சங்கீதா தான் என்னை பாலா சார் கிட்ட கூட்டிட்டு போயி அறிமுகப்படுத்தி வச்சாங்க.

அப்புறம் பாலா சார் எனக்கு ஸ்கிரீன் டெஸ்ட் வச்சாரு, அதுக்கப்புறம்தான் இந்தப் படத்துல நடிக்கவே என்னை தேர்வு பண்ணாரு.

எனக்கு டான்ஸ் நல்லா வரும்கறதுக்காக அவர் என்னைத் தேர்வு செஞ்சிருக்கலாம்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, படத்துல டான்சுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கு.

ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கும் போது, நானும், சசியும் நடிச்ச சீன்ஸைப் பார்த்து அவர் முடிவு பண்ணியிருக்கலாம். பாலா சார் தேர்வு பண்ணாலே அதுல ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும், அப்படித்தான் என்னையும் தேர்வு செஞ்சிருக்காருன்னு நினைக்கிறேன்.

அவர் என்ன எதிர்பார்த்தாரோ, அதை நாங்க நடிச்சிருக்கமான்னு தெரியலை, ஆனால், எங்களால முடிஞ்ச நடிப்பைக் கொடுத்திருக்கோம்னு நினைக்கிறேன்.

இந்தப் படத்துல எது கஷ்டம்னு கேட்டீங்கன்னா அது டான்ஸ்தான். பிருந்தா மாஸ்டர், பாபா பாஸ்கர், சுசித்ரா, ராதிகா, தினேஷ் மாஸ்டர் இப்படி எல்லாருக்குமே நன்றி சொல்லணும். பாட்டுல இருக்கிற ஒவ்வொரு வேகமான பீட்டுக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடியிருக்கன்.

இந்தப் படம் என்னோட வாழ்க்கை, இப்பதான் என் வாழ்க்கை ஆரம்பிக்குதுன்னு சொல்லுவேன். இதுக்கு முன்னாடி சில படங்கள்ல வில்லேக் காரக்டருக்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டன்னு சொல்லியிருக்காங்க.

இப்ப பாலா சாரால ‘சூறாவளி’ கதாபாத்திரத்துல நடிச்ச பிறகு, இதுக்கு மேலயும் ஒரு வில்லேக் கேரக்டர்ல நடிக்க முடியாதுங்கற ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கு.

‘போடா போடி’ படத்துக்கு அப்புறம் ‘தாரை தப்பட்டை’ படத்துல நடிச்சது, எனக்கு இத்தனை நாளா காத்திருந்ததற்கான பலனைத் தரும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் வரலட்சுமி.

Read Previous

‘தாரை தப்பட்டை’, தனி சந்தோஷம் – சசிகுமார்

Read Next

‘கதகளி’ சிறப்பான கதை – விஷால்