பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ள படம் பாலாவின் ‘தாரை தப்பட்டை’.
இளையராஜாவின் 1000மாவது படம், குரு பாலா இயக்கத்தில் சிஷ்யன் சசிகுமார் முதல் முறையாக நடிக்கும் படம்.
தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களில் ஒன்றான ‘கரகாட்டம்’ பற்றிய கதையை, அதன் மண் மணம் மாறாமல் பாலா படைத்திருப்பார் என தீவிர சினிமா ரசிகர்களால் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் படமாக இருக்கிறது.
படம் பற்றி படத்தின் நாயகன் சசிகுமார் முதல் முறையாகக் கூறிய சில விஷயங்கள்….
“இந்தப் படம் மொத்தமாவே பாலா சாரோட படம்தான், அதுல நாங்க நடிக்கிறோம், ரொம்ப சந்தோஷம். எனக்கு என்ன தனிப்பட்ட சந்தோஷம்னா, அவர் கூட ‘சேது’ படத்துல உதவி இயக்குனராக வேலை பார்த்துட்டு, இப்ப அவர் இயக்கத்துல நடிக்கிறது தனி சந்தோஷம்.
படத்துல நடிக்கிறதுக்கு நான் ஹீரோவாலாம் போகவேயில்லை, அவரோட சிஷ்யனாதான் போனேன், இந்தப் படத்துல மறுபடியும் நான் அவர் கிட்டடேயிருந்து நிறையே கத்துக்கிட்டேன்.
படத்துல என் கேரக்டர் பேரு சன்னாசி. நான் ‘தாரை தப்பட்டை’ங்கற குழுவ நடத்துறவன். நான் ‘கரகாட்டம்’லாம் ஆட மாட்டேன். ஆள் இல்லைன்னா, நாதஸ்வரம் வாசிக்கிறது, தவில் வாசிக்கிறது இப்படி எல்லாத்தையும் செய்யறவன்.
பாலா சார் இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு விருப்பப்பட்டாரு. படம் ‘கரகாட்டம்’ சம்பந்தப்பட்ட கதை, அதனால பயிற்சி எடுத்துக்கணும்னு சொன்னாரு. நடனம் ஆடறது, நாதஸ்வரம் வாசிக்கிறது எல்லா எடுக்கணும்னு சொன்னாரு. அப்புறம் இரண்டு மாசம் அதுக்காக பயிற்சி எடுத்தேன்.
இதுக்கு முன்னாடி வந்த ‘கரகாட்டம்’ சம்பந்தமான படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது பாலா சார் பாணியில உருவாகியிருக்கிற படம்.
இளையராஜா சாரோட 1000மாவது படத்துல நடிக்கிறது பெருமையான விஷயம். இந்தப் படத்துக்காக அவர் காட்சிகளுக்கான இசையைப் பதிவு பண்ணி முன்னாடியே கொடுத்துடுவாரு. அதுக்கு ஏத்தபடி நாங்க ஃபீல் பண்ணி நடிச்சது புது அனுபவமா இருந்துச்சி.
‘கரகாட்டம்’கறது ஒரு என்டர்டெயின்மென்ட், நம்மள என்டர்டெயின் பண்றவங்க. அவங்க வாழ்க்கையில நடக்கிற சந்தோஷம், துக்கம், காதல் அது எல்லாமும்தான் இந்தப் படத்துல இருக்கு,” என்கிறார் சசிகுமார்.