‘வேதாளம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜித் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றி இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை.
அவர் எந்தத் தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கப் போகிறார், அவரை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பது போன்ற விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலே உள்ளது.
ஆனால், அதற்குள் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை, தமன்னாதான் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதோடு அந்தப் படத்தில் அஜித்துடன் மோகன்லால் நடிக்கப் போவதாகவும் சிலர் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் புதிய படத்திற்கு அடுத்து விஜய்யும், மம்முட்டியும் இணைந்து நடிக்கப் போவதாக யாரோ தகவலைப் பரப்பியிருந்தார்கள். அதற்குப் போட்டியாக தற்போது அஜித் – மோகன்லால் இணைந்து நடிக்கப் போவதாகவும் யாராவது தகவலைப் பரப்பியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருக்கும் அஜித், இன்னும் சில வார ஓய்விற்குப் பிறகுதான் அவருடைய அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பையே வரவைப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.