விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ்.
அந்தப் படத்திற்குப் பிறகு தற்போது ‘கயல்’ சந்திரன் நாயகனாக நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
“பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு எனக்கு அதே மாதிரியான கதாபாத்திரங்கள் தான் வந்து கொண்டிருந்தது. நான் தேர்ந்தெடுக்கும் கதையும், கதாபாத்திரமும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் பதிய வேண்டும். இந்த கதாபாத்திரத்தை சாட்னா டைட்டஸ் நன்றாக திரையில் பிரதிபலித்து இருக்கிறார் என்று அவர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய முழுமையான வெற்றியாக நான் கருதுகிறேன். அப்படி நான் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ நிச்சயமாக தமிழக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எந்த ஒரு விஷயத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் மாடர்ன் பெண்ணாக இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் நான் நடித்து வருகிறேன். இதுவரை நான் பழக்கப்படாத ஒரு வேடம் என்பதால், எனக்கு இந்த கதாபாத்திரத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது.
ஒரு மாடர்ன் பெண்ணின் நடை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் எந்த மாதிரியான உடைகளை அணிவார்கள், பேசும் விதம், மற்றவர்கள் மத்தியில் தைரியமாக பேசக்கூடிய தோரணை என பல குணாதிசயங்களை இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்திற்காக நான் உள்வாங்கி இருக்கிறேன்.
என்னுடன் இணைந்து நடிக்கும் கயல் சந்திரன் ஒரு ஹீரோவாக இல்லாமல் எனக்கு சிறந்த நண்பராகவும், படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு பக்கபலமாகவும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படமானது தமிழக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்துச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்கிறார் சாட்னா டைட்டஸ்.
கூடுதல் தகவல், சாட்னா டைட்டஸ் நன்றாக தமிழ் பேசக் கூடியவர்.