சிவகார்த்திகேயன், பி.ஈ., எம்பிஏ முடித்து விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு பட்டம் வென்றவர்.
அதன் பின் ‘மெரினா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச் சட்டை, ரஜினி முருகன்’ என வசூல் ரீதியான வெற்றிப் படங்களில் நடித்து குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அவர் நடித்து கடந்த 7ம் தேதி வெளியான ‘ரெமோ’ படமும் வசூலில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமான இன்று நடைபெற்ற நன்றி விழா நிகழ்ச்சியில் தன் உள்ளத்தில் புதைந்து கிடந்த குமுறல்களை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார் சிவகார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
“ஒரு மனிதன் இந்தப் படத்தை ஆரம்பிச்சதுல இருந்து முடிவு வரைக்கும் அதை சரியா கொண்டு போய் நிறுத்தினார்னா அது தயாரிப்பாளர் ராஜா சார்தான்.
‘ரஜினி முருகன்’ ரிலீஸ் அன்னைக்கு ராஜா அண்ணனுக்கு போன் பண்ணேன். தெரியலை சிவா, இன்னும் கன்ஃபர்ம் ஆகலைன்னு சொன்னாரு. படம் ரிலீஸ் அன்னைக்கு காலையில 7 மணிக்கு என் படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதான்னு ஒரு தவிப்பு இருக்கு பார்த்தீங்களா, எங்க டீமும் நாங்களும் எந்த தவறுமே செய்யாம நாங்க தவிச்ச தவிப்பு…
ஒரு படத்தை எடுத்துக்கிட்டு அதை சுத்தியே ஓடி ஓடி வேலை செஞ்சி அப்படி ஒரு வலி தேவையில்லை, அப்படி இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அப்படி எந்த ஒரு வலியையுமே கொடுக்காம நான் 18 மணி நேரம் ஷுட்டிங் போயிட்டு, நான் போயி என் குழந்தையோட விளையாடலாம்.
ஆனால், ராஜா அண்ணனை நான் ஃபேமிலியோட பார்க்கவேயில்லை. எனக்கு ரொம்ப எமோஷனலா இருக்கு,” என தன்னை மீறி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமைதியாக நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, “நிறைய புரொடக்ஷன் ஹவுஸ்ல நான் பார்த்திருக்கேன், இந்த டிசைனைக் கொடுங்க, அது விளம்பரத்துக்கு நல்லா இருக்கும்னு கெஞ்சிக்கிட்டேயிருப்பாரு. நிறைய கம்பெனியில அவரை வாசல்லயே நிப்பாட்டியிருக்காங்க. ஆனாலும், அந்த கம்பெனிக்காக மட்டுமே வேலை செஞ்சிருக்காரு.
அவருக்கு ஏதாவது சொத்து இருக்கான்னு கேளுங்க, சொந்தமா கார் இருக்கான்னு கேளுங்க.
இந்தப் படம் ரிலீசுக்கு எவ்வளவு பிரச்சனை பண்ணுவீங்க. எங்களை வேலை செய்ய விடுங்க, கெஞ்சிக் கேக்கறேன் வேலை செய்ய விடுங்க, அவரையும் சரி என்னையும் சரி. இன்னைக்கு வரைக்கும் அவர் தூங்கலை.
நீங்க எல்லாருக்கும் ஏத்திக் கொடுத்ததுதான் இந்த மேடை. எல்லாரையும் என்டர்டென் பண்ணலாம், தியேட்டர்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கும் போது ஆசையா இருக்கு.
நாங்க யார்கிட்டயும் எதுவுமே கேக்கலை, உதவி எதுவுமே செய்ய வேணாம். உதவியோ ஆதரவோ கொடுக்கிறதுக்கு மீடியா இருக்காங்க, மக்கள் இருக்காங்க. ஆனா, வேலை செய்யறத தயவு செஞ்சி தடுக்காதீங்க. அதை எல்லாருக்கும் நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன்.
நீங்க எல்லாரும் உட்கார்ந்திருக்கிற இடத்துல இருந்துதுன் நானும் இந்த மேடைக்கு ஏறி வந்திருக்கேன். உங்க எல்லாருக்குமே தெரியும் இந்த இடம் எவ்வளவு கஷ்டம்னு.
ஒரு நாள் நீங்க எல்லாரும் பெருமைப்படும்படியான ஒரு படத்தைக் கொடுப்பேன். ஒரு கம்பெனிக்கு ஒரு இயக்குனருக்கு முதல் படம் ரொம்ப முக்கியம். அதுக்கு நீங்க எல்லாரும் உறுதுணையா இருந்திருக்கீங்க.
சில பேருக்கு வருத்தம் இருக்கலாம். ஏர்ற மேடையில எல்லாம் நான் அழுகிறேனேன்னு நினைக்கலாம்.
தப்பான விஷயம் செஞ்சால்தான் தப்புன்னு நினைக்கிறேன், நான் உண்மையா இருக்கிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறேன். எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறோம்.
இந்தக் கண்ணீரைத் தாண்டி ராஜா அண்ணனுக்கு என்ன திருப்பிக் கொடுக்கிறதுன்னு தெரியலை.
எல்லாரும் நினைக்கலாம், ரொம்ப ஹிட் வந்துட்டிருக்குன்னு. அதுதான் பெரிய பயத்தைக் கொடுக்குது.
யார்கிட்ட இருந்தோ இந்த ஹிட்டைத் திருடிட்டு வர்ற மாதிரியே நினைக்கிறாங்க, அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப போராடி, போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஆறு மாசம் நான் சும்மா உட்கார்ந்திருக்கேன். அந்த நேரத்துல இரண்டு படம் பண்ணியிருக்கலாம், ஆனால் அப்படி பண்ண விருப்பமில்லை.
தினமும் 20 மணி நேரம்லாம் ஷுட் பண்ணியிருக்கேன், டயர்டா இருந்திருக்கேனே தவிர, சோகமா இருந்ததில்லை.
ஹிட், சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர், சரியில்லைனு எல்லாத்தையும் நீங்க சொல்லுங்க,” என உணர்ச்சிபூர்வமாகப் பேசினார் சிவகார்த்திகேயன்.
இந்த ‘ரெமோ’ நன்றி நிகழ்ச்சியில் படத்தை வெளியிட்ட அனைத்து வினியோகஸ்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி கீர்த்தி சுரேஷ், நடிகை சரண்யா பொன்வண்ணன், நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, அன்சன், கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு, படத் தொகுப்பாளர் ரூபன், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி, பாடலாசிரியர்கள் விவேக், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.