‘உறுமீன்’ படத்தைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் பாக்டரி ஜி. டில்லிபாபு அடுத்து தயாரித்து வரும் படம் ‘மரகத நாணயம்’.
அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஷ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
1100, 1992, 2016 கால கட்டங்களில் நடக்கும் கதை என்கிறார் படத்தின் இயக்குனர் சரவணன்.
“ரசிகர்கள் இதுவரை ஆதியை ஒரு அதிரடி நாயகனாகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் ‘மரகத நாணயம்’ மூலமாக முற்றிலும் மாறுபட்ட ஆதியையைப் பார்ப்பார்கள். பல புதுமையான நகைச்சுவைக் காட்சிகளுடன் படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஒரு உண்மைச் செய்தியின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.
“எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தை பொறுத்த வரை கதை தான் ஹீரோ. நல்ல கதை உள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து தயாரித்து வருகிறோம். 90 கதைகளைக் கேட்டு, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த மரகத நாணயம்,” என்கிறார் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு.
” திரைப்படங்களில் வழக்கமாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் மசாலா காட்சிகள் இந்த படத்தில் இருக்காது. ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடி வரை, ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள். இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை நாங்கள் எங்களின் மரகத நாணயம் படத்தில் இருப்பதே அதற்குக் காரணம். என்னுடைய புதிய அவதாரத்திற்கு பிரகாச வெளிச்சத்தை இந்த மரகத நாணயம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்கிறார் ஆதி.