தமிழ்த் திரையுலகத்தில் தனது குணச்சித்திர நடிப்பால் தற்போது தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் பாஷா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’.
‘சைவம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லுத்புதீன் ‘பறந்து செல்ல வா’ படத்தில் நடித்த தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
‘பறந்து செல்ல வா’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல, இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல் கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் முற்றிலும் புதிய விதத்தில் உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
120 ரூபாயில் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும். ‘சைவம்’ திரைப்படத்தை முடித்துவிட்டு நான் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் தனபால் ‘பறந்து செல்ல வா’ கதையைக் கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். இப்படத்தில் சம்பத் என்ற முக்கிய கதாபாத்திரம் உள்ளது, அதில் நான்தான் நடிக்க வேண்டும் என்றார். கதையை முழுவதும் படித்தேன், கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது , எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் படப்பிடிப்புத் தளத்தில் என்னுடன் நட்போடு இருந்தார்.
எனக்கு சில இடங்களில் தடுமாறும் போது சொல்லிக் கொடுத்தார். இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அதை நான் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் “ நீ ஒரு நடிகன் , கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும்,” என அறிவுரை கூறினார்.
படம் முடித்து விட்டு என்னுடைய அம்மாவையும், தாணு சாரையும் அழைத்து படத்தைத் திரையிட்டோம். அவர் திரைப்படத்தைப் பார்த்து முடித்துவிட்டு இடைவேளையில் ஏதாவது கூறுவார் என எதிர் பார்த்தேன். அவர் முழுப் படத்தையும் பார்த்து முடித்து விட்டு என்னை அழைத்து மிகவும் பாராட்டினார் . மொத்தம் 50 நாட்களில் எங்கள் படம் படமாக்கப்பட்டு இருப்பதைக் கேள்விப்பட்டு எங்களைப் பாராட்டினார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரபாகர் மற்றும் சந்தோஷ். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிகச் சிறந்த முறையில் வந்துள்ளது. மேலும் ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான ‘நம்ம ஊர் சிங்காரி’ பாடல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நடனம் வகுப்புக்கு நான் சென்றது கிடையாது. இப்படத்தில் இரவு நேரங்களில்தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. படத்தைப் பார்த்து விட்டு அனைவரும் பாராட்டினார்கள்.
மிகச் சிறிய குழு இணைந்து மிகச் சிறந்த முறையில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளது. தயாரிப்பாளர் அருமை சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்,” என்றார் லுத்புதின் பாஷா.