சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

தமிழ் சினிமாவில் இடைவிடாமல் பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படமும் மற்றுமொரு பேய்ப் படம்தான்.

வழக்கம் போல, அதே பேய் குடியிருக்கும் ஒரு பங்களா, அந்த வீட்டிற்கு குடி வரும் குடும்பத்தினர் என ‘சந்திரமுகி’ காலத்து கதையை மீண்டும் ‘சங்கிலி’ கட்டி இ…..ழுத்து வந்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஐக், தன் பெயரில் வைத்திருக்கும் வித்தியாசத்தை படத்தின் கதையிலும் வைத்திருக்கலாம். சரி, கதையில்தான் இல்லை என்றால் திரைக்கதையிலாவது சேர்த்திருக்கலாம். சரி, திரைக்கதைதான் சரியாக இல்லை என்றால் ஆங்காங்கே காமெடியையாவது வைத்து கலக்கியிருக்கலாம். சங்கிலி கட்டி இழுக்க வேண்டிய படத்தை நூலைக் கட்டி இழுத்திருக்கிறார்கள்.

வாடகை வீட்டில் குடியிருந்து அடிக்கடி விரட்டி விடப்படும் ஏழை அப்பா, அம்மாவிற்குப் பிறந்த ஜீவா, ஒரு முறை வீடு மாறும் போது, ஒரு பங்களாவைப் பார்த்து, எப்படியாவது இந்த வீட்டை வாங்குகிறேன் என அம்மாவிடம் சபதம் செய்கிறார். பெரியவனானதும், வீட்டு புரோக்கராக இருந்து பல தகிடுதத்தம் செய்து விற்காக வீடுகளையும் விற்க வைக்கிறார். அவர் சபதம் எடுத்த வீட்டை வாங்க, அங்கு பேய் இருப்பதாகக் கதை கட்டி விட்டு, குறைந்த விலைக்கு வாங்கி அங்கே அம்மா, மாமா குடும்பத்துடன் குடி போகிறார்.

வீட்டுக்குள் போன பிறகுதான் உண்மையிலேயே அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது. அதே சமயம், அவருடைய காதலி ஸ்ரீதிவ்யா அப்பா தம்பி ராமையாவும் அந்த வீட்டிற்கு சொந்தம் கொண்டாடுகிறார். ஒரு கட்டத்தில் ஜீவா தவிர மற்றவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழல் வருகிறது. பேய் இருப்பதையும் மீறி எப்படியாவது அந்த வீட்டைக் கைப்பற்றி, பேயை விரட்ட வேண்டும் என ஜீவா, நண்பன் சூரியுடன் களம் இறங்குகிறார். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஜீவாவுக்கு காமெடி கதைகள் அல்வா சாப்பிடுவது போல. அதை ‘சிவா மனசுல சக்தி’ காலத்திலிருந்தே நிரூபித்து வருகிறார். ஆனால், அவர் விளையாடுவதற்கு ஏற்ற கதை வேண்டுமே. இந்தப் படத்திலும் அவருக்கு சரியான களம் அமைத்துத் தரவில்லை இயக்குனர். ஸ்ரீதிவ்யாவுடனான காதலில் மட்டும் கவர்கிறார். மற்ற காட்சிகளிலும் அவர் குறை வைக்கவில்லை.

ஜீவாவின் காதலியாக ஸ்ரீதிவ்யா. அதிக வேலையெல்லாம் இல்லை. ஒரு நான்கு காட்சிகள், இரண்டு பாடல்கள் என அவருடைய கடமை முடிந்து விடுகிறது. பேய் படம் என்பதால் தேவைதைகளுக்கு வேலை இல்லை போலிருக்கிறது.

சூரிக்கு என தனியாக காமெடி ரைட்டர்கள் இல்லை போலிருக்கிறது. அவரும் ரசிகர்கள் சிரிப்பார்கள் என நினைத்து ஏதேதோ செய்கிறார், ஆனால், சிரிப்புதான் வரவில்லை.

படத்தின் திரைக்கதை இங்கும் அங்குமாக பேயைப் போலவே அலைந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரம் காதல், கொஞ்ச நேரம் பேய், கொஞ்ச நேரம் சென்டிமென்ட் என சேர்த்திருக்கிறார்கள்.

கோவை சரளா, ராதிகா, இளவரசு, ராதாரவி, தம்பி ராமையா, தேவதர்ஷினி, மயில்சாமி என திறமையான நடிகர்கள் இருந்தும் யாருடைய கதாபாத்திரமும் மனதில் ஒட்டவில்லை. ராதாரவி மட்டும் வழக்கம் போல தன்னுடைய பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்தான் படத்தின் ‘சங்கிலி’. சூரிக்கு ஜோடியாக ‘ஆபீஸ்’ சீரியல் மதுமிளா, என்ன கொடுமை சரவணன் இது.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் சுமாருக்கும் கீழ் ரகம். பின்னணி இசையில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறார்.

ஒரு பேய்ப் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமே அனைத்துமே வழக்கம் போல இருக்கிறது. படம் பார்க்கும் குழந்தைகளே அடுத்த என்ன வரும் என்று சரியாக சொல்லி விடுவார்கள்.

 

Read Previous

Zee Tamil overhauls timings of Sunday shows

Read Next

தமிழில் ‘3 D’ படமாக வெளிவரும் ‘புலி முருகன்’