அறிமுக இயக்குனர், அறிமுக நாயகன் என புதுமுகங்களுடன் வெளிவரும் சில நல்ல படங்கள் கூட சில பல காரணங்களால் பெரிய வெற்றியைப் பெறாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட படங்களுக்கு யாராவது ஒரு விடிவு காலத்தைக் கொடுத்தால்தான் அந்த மாதிரியான படங்கள் வாழ்ந்து சினிமாவையும் வாழ வைக்கும்.
பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களைக் கொடுப்பவர்கள் இந்த மாதிரிய சிறிய படங்களுக்கும் ஆதரவு கொடுத்து சினிமாவை எப்போது வாழ வைக்கிறார்களோ அப்போதுதான் சினிமாவும் உருப்படும்.
அறிமுக இயக்குனர் சுரேஷ்குமார், தன்னுடைய கதையை நம்பி களமிறங்கியுள்ள படம். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு கலகலப்பான ஒரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
கொஞ்சம் அப்பாவியான விஷ்ணுவுக்கு காதல் என்பதே வராமல் இருக்கிறது. இதனால் அவருடைய நண்பர்கள் கூட அவரைக் கிண்டல் செய்கிறார்கள். எப்படியாவது ஒரு பெண்ணைக் காதலித்துக் காட்டுகிறேன் பார் என நண்பர்களிடம் சவால் விடுகிறார். தன் பழைய தோழி இஷாரா ஞாபகம் வர, அவரைத் தேடிச் செல்கிறார். ஆனால், இஷாராவுக்கோ திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. பின்னர் வர்ஷாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால் வர்ஷாவோ இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவரை எப்படி காதலிக்க வைப்பது என்பதில் விஷ்ணு சந்திக்கும் பல பிரச்சனைகள்தான் படத்தின் மீதிக் கதை.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் மூலம் நடித்து பலரையும் கவர்ந்த விஷ்ணு, இந்தப் படத்தில் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். அவருடைய அப்பாவித்தனமான முகமும், வசன உச்சரிப்பும் அவருடைய கதாபாத்திரத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.
வர்ஷாதான் படத்தின் நாயகி. இவ்வளவு உயரம் குறைவானவரை எப்படி காவல் துறையில் தேர்ந்தெடுப்பார்கள் என்பது பெரிய கேள்வி. ஆனாலும், நடிப்பில் குறை வைக்கவில்லை வர்ஷா. மற்றொரு கதாநாயகியாக இஷாரா. ஏன், அப்படி மெதுவாக படம் முழுவதும் பேசுகிறார் என்பதுதான் புரியவில்லை.
படத்தின் இரண்டாவது பகுதி, வேறு தடத்தில் பயணிப்பது எதிர்பாராதது. இருந்தாலும் இடைவேளைக்குப் பின் படத்தைத் தங்களது நகைச்சுவை நடிப்பால் தாஸ், பக்ஸ், ராம்ஸ் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.
ரகுநந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நிறைவாகவே அமைந்துள்ளன.
இம்மாதிரியான கலகலப்பான படங்களை, முன்னணி தயாரிப்பாளர்களோ முன்னணி வினியோகஸ்தர்கள் யாராவது கை கொடுத்து தூக்கி விட்டால் நல்லது. ரசிகர்களுக்கு கலகலப்பான ஒரு நல்ல படம் போய்ச் சேரும்.
ரசிர்களின் ரசனையை மட்டுமே மனதில் கொண்டு இந்தப் படத்தைக் கொடுத்துள்ள சுரேஷ்குமார் பாராட்டுக்குரியவர்.