‘சோலோ’ – 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள்

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் ஒரு படத்திலேயே 30 அல்லது 40 பாடல்கள் இருக்கும். ஆரம்ப கால சினிமாவில் அப்படித்தான் இருந்தது. 1950களுக்குப் பிறகுதான் அந்தப் பாடல்கள் 10க்கும் குறைவாக வந்தன. அதன்பின் 5 பாடல்கள் வரையும் குறைந்தன.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது ‘சோலோ’ படத்தில் 15 பாடல்கள் இடம் பெறுகின்றன. பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சோலோ’.

11 இசையமைப்பாளர்கள் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள். மொத்தம் 15 பாடல்கள். அனைத்துமே 4 நிமிடப் பாடல்களாக இருக்குமா, சிறிய பாடலாக இருக்குமா என்பதை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை.

பிரசாந்த் பிள்ளை, கோவிந்த் மேனன், தாய்க்குடம் பிரிட்ஜ், மசாலா காஃபி, கௌரவ் குக்கிந்தி, ராகினி பகவத், அபினவ் பன்சால், அகம், பில்டர் காபி, சூரஜ் எஸ் குரூப், செஸ் ஆன் த பீட் என சில இசைக்குழுக்களும் அடங்கி 11 இசையமைப்பாளர்கள் படத்திற்கு இசையமைக்கிறார்கள்.

இப்படத்தின் சிறு பார்வை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜீவ் மேனன் 15 பாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.

“2 மொழிகளில் இந்த படத்துக்கு மொத்தம் 30 பாடல்கள். நாங்கள் 1 பாடல் எடுக்கவே ரொம்ப கஷ்டப்படுகிறோம்,” என வியந்து பாராட்டினார்.

படத்திற்கு இசையமைப்பாளர்கள் 11 பேர் என்றால் ஒளிப்பதிவாளர்கள் 3 பேர்.

படத்தின் பெயர் ‘சோலோ’, அதற்கு ‘ஒருவர், தனியாள்’ என்று அர்த்தம். ஆனால் ஒருவர் மட்டுமே பணியாற்ற வேண்டிய துறையில் பலர் பணியாற்றுகிறார்கள்.

Read Previous

‘மதுர வீரன்’ முதல் பார்வை வெளியீடு

Read Next

‘ஃபெப்ஸி’ ஸ்டிரைக், வளரும் விவகாரம்…