தமிழ் சினிமாவில் தடுக்கி விழுந்தால் போலீஸ் படங்களும், பள்ளத்தில் விழுந்தால் எப்போதாவது ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களும் வரும். கொஞ்சம் ரிஸ்க்கான கதைகளை நமது ஹீரோக்கள் அதிகம் எடுக்க மாட்டார்கள்.
போலீஸ், ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் என்றால்தான் மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் ‘பன்ச்’ டயலாக் பேசி கைத்தட்டல்கள் வாங்க முடியும். இந்த ‘நெருப்புடா’ படத்தை ஒரு தீயணைப்பு வீரர் சம்பந்தப்பட்ட கதையாக தேர்ந்தெடுத்தற்காகவே அறிமுக இயக்குனர் அசோக் குமார்-ஐ தாராளமாகப் பாராட்டலாம்.
பொதுவாக இம்மாதிரியான கதைகளில் நடிகர்களும், நடிகைகளும் நடிக்கத் தயங்குவார்கள். கொஞ்சம் சறுக்கினாலும் தீக் காயம் பட்டுவிடும். அப்புறம் நடிப்பதற்கே கூட ஆபத்து வரலாம். அதையெல்லாம் மீறி இந்தப் படத்தைத் தயாரித்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். அது விக்ரம் பிரபுவிடம் தாராளமாக இருந்திருக்கிறது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அவரது வெறிக்கு இந்தப் படம் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும்.
சிறு வயதிலேயே தீயணைப்பு வீரர் ஆக வேண்டும் என்பது விக்ரம் பிரபுவின் கனவு. ஆபத்தில் இருப்பவர்களின் உயிரைக் காப்பாற்றும் அந்த வீரம்தான் அவருக்கு பிடித்துப் போகிறது. அவருடைய கனவு போலவே கனவு காணும் நான்கு பேர் விக்ரம் பிரபுவுடன் நண்பர்கள் ஆகிறார்கள். இளைஞர்கள் ஆனதும், அழைப்பு வந்தாலே போதும் சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கும் தீயணைப்பு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். தேர்வு எழுதி அரசாங்க தீயணைப்பு வீரர் ஆக வேண்டும் என்ற அவர்களது லட்சியத்திற்கு ஒரு ரவுடியின் திடீர் மரணம் மூலம் ஆபத்து வருகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தை மிகவும் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். எதிர்பாராத கிளைமாக்ஸ் திருப்பம், யார் அந்த வில்லன் என்பதும் சரியான டிவிஸ்ட்.
விக்ரம் பிரபு ஆறடி உயரத்திற்கு இருப்பதால் அவரால் ஆக்ஷன் படங்களிலும், கதாபாத்திரங்களிலும் அசத்தலாக செயல்பட முடிகிறது. இந்தப் படம் போல பொருத்தமான கதாபாத்திரங்களும், கதையும் கிடைத்தால் இன்னும் உயரம் தொடலாம். இதற்கு முந்தைய படங்கள் கொடுக்காத வெற்றியை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
படத்தின் நாயகி நிக்கி கல்ராணி, இவருக்கும் விக்ரமுக்கும் இடையில் காதல் காட்சிகள் குறைவுதான், இருந்தாலும் இருவரது ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே உள்ளது.
படத்தில் நமக்குத் தெரிந்த வில்லனாக மதுசூதன ராவ். நகைச்சுவைக்கு மொட்டை ராஜேந்திரன், அவருடைய பங்கிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார். விக்ரம் பிரபுவின் நண்பர்களாக நடித்திருக்கும் வருண், ராஜ்குமார், வின்சென்ட், விக்ரமின் அப்பா பொன்வண்ணன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு.
ஷான் ரோல்டன் பின்னணி இசையில் காட்டிய பலத்தைப் பாடலில் காட்டியிருக்கலாம். அது மிஸ்ஸிங்.
படத்தின் கிளைமாக்ஸ் எப்படி போகும் என நாம் ஒரு கற்பனையில் இருக்க, படத்தை வேறு மாதிரி கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். எதிர்பாராத டிவிஸ்ட்தான் என்றாலும் அது கிளைமாக்சின் அழுத்தத்தைக் கொஞ்சம் குறைத்து விடுகிறது.
நெருப்புடா டிரைலர்