வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘வேலு நாச்சியார்’

பல இடங்களில் மேடையேற்றப்பட்ட ‘வேலு நாச்சியார்’ நாடகம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த ‘வேலு நாச்சியார்’ மேடை நாடகத்தை கண்ணகி பிலிம்ஸ் சார்பில் மதிமுக கட்சியின் செயலாளர் வைகோ மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாரிக்க உள்ளார்.

வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. ‘வேலு நாச்சியார்’ கதையைத் திரைப்படமாகத் தயாரிப்பது எனக்கு மிகப் பெரிய கனவாகும்,” என்கிறார் வைகோ.

‘வேலு நாச்சியார்’ படம் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால் கலந்து கொண்டு பேசியதாவது,

“வைகோ அவர்கள் ‘வேலு நாச்சியார்’ திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக அதைத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை ‘வேலு நாச்சியார்’ மேடை நாடகத்தைப் பார்க்கக் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். இந்த நாடகத்தை இயக்கிய இயக்குனருக்கும், இந்த நாடகத்தில் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் , பெரிய மருது , சின்ன மருது கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நடித்த நடிப்பு , தங்களுடைய கடுமையான உழைப்பு அனைத்துக்கும் பாராட்டுக்கள்.

இங்கே நமது திரைத் துறையைச் சேர்ந்த பலரும் இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு வரி கட்டுவதை எதிர்த்து வேலு நாச்சியார் போராடினார். தமிழக அரசை கேளிக்கை வரியை ரத்து செய்ய வைப்பது எப்படி என்று நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நிச்சயம் ஒரு நல்ல தீர்வு எங்களுக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பான பாதை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்த வேலு நாச்சியார் என்ற கதாபாத்திரத்துக்கும், என்னை ஊக்குவித்த வேலு நாச்சியார் கதாபாத்திரத்துக்கும் நன்றி.

நான் கத்தியால் சண்டை போடப் போவதில்லை, புத்தியால் தான் சண்டை போடப் போகிறேன். கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எனக்கு வேலு நாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது டென்ஷனை குறைப்பதாக இருந்தது. இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்கப் போகிற வைகோ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி,” என்றார் விஷால்.

விழாவில் வைகோ பேசியதாவது,

“இந்த எளியவனுடைய அழைப்பை ஏற்று இந்த அரங்கத்தில் வந்து தமிழர்களின் உயிர்க் காவியமான, இமயமலை முதல் அலைகள் பொங்கி விளையாடும் கன்னியாகுமரி முனை வரை இந்த உபநிடத்திலே ஆதவன் அஸ்தமைக்காத எங்களை பிரிட்டிஜ் சாம்ராஜ்யம் கட்டளை புரிந்து கொண்டிருந்தது. அந்த ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலு நாச்சியார்.

நான் ஜான்ஸி இராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானா சாகிப்பை மதிக்கிறேன். அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி பெற்ற வெற்றி வரலாற்றை, திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணு கோபால்சர்மா அவர்களின் அருமை திருமகனார் சிரிகாந்சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் என்னைச் சந்தித்து சொன்ன போது மெய் மறந்து போனேன்.

இந்த நாட்டிய நாடகத்தில் நீங்கள் வேலு நாச்சியாரை கண்டீர்கள். உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைப் போல சகோதரி மணிமேகலை சர்மா வேலு நாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார்.

இந்தக் காவியத்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டுவதற்கான காரணம் இங்கே ஹைதரலியும் வேலு நாச்சியாரும் சந்திக்கின்ற காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. வேலு நாச்சியார் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைப்படுகிறேன்,” என்றார் வைகோ.

Read Previous

மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்போம் – விஷால்

Read Next

சிம்பு இசையமைக்க, அனிருத் பாட, சந்தானம் ஆட…..