கணேஷ் ட்ரீம் பேக்டரி சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் பிரம்மா.காம்.
P.S.விஜயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நகுல், ஆஷ்னா சவேரி, பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் நகுல், ஆஷ்னா சவேரி, உபாசனா, கௌசல்யா, பாக்யராஜ், ஜெகன், சித்தார்த் விபின், இயக்குனர் விஜய்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் பாக்யாராஜ் பேசியபோது,
“இயக்குனர் விஜய் எனக்கு போன் செய்து, படம் எந்தவித கட் இல்லாமல் க்ளீன் யூ வாங்கியுள்ளது என்றார். அவரது உழைப்பிற்கும், படக்குழுவின் உழைப்புமே இதற்குக் காரணம். எல்லோரையும் போல் நானும் மிக ஆர்வமாக இருக்கிறேன், படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறேன். இந்த படம் முழு வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
மதன் கார்க்கி பேசும் போது,
“இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு என்னுடைய நன்றி. தமிழில் ‘பிரம்மா.காம்’ போன்ற காமெடி, பேண்ட்ஸி படங்கள் மிகக் குறைவு. இது ஒரு நல்ல முயற்சி, விஜய்குமாரின் இந்த படம் மட்டுமல்ல, அடுத்தடுத்த படங்களுக்காக அவர் வைத்திருக்கும் ஐடியாக்கள் எல்லாமே ‘அவுட் ஆப் தி பாக்ஸ் ரேஞ்சில்’ இருக்கிறது.
கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் உரையாடலாக நகரும் திரைக்கதை கொண்ட, இது போன்ற படங்களைத் தேர்வு செய்ததற்கு நகுலுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சித்தார்த் விபின் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் நடிக்க செல்வது தான் சற்று வருத்தமாக உள்ளது. ஜி.வி. பிராகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் இப்போது சித்தார்த் விபினும் நடித்து வருகிறார்,” என்றார்.