ரிச்சி – விமர்சனம்

தமிழ் சினிமா இப்படி ஒரு ‘தாதா’ கதையைப் பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். கன்னடத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘உலிடவரு கண்டன்தே’ என்ற படத்தின் ரீமேக் தான் இந்த ‘ரிச்சி’. விக்கி பீடியா தகவலின் படி சுமார் 3 கோடி ரூபாயில் தயாராகி, 20 கோடி ரூபாய் வசூலைக் குவித்த ஒரு வெற்றிப் படத்தை தமிழில் ‘ரிச்சி’ ஆக ரீமேக் செய்து அந்தப் படத்தின் பெருமையையும் குலைத்திருக்க வேண்டாம்.

கதை

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள மணப்பாடு என்ற மீனவ கிராமத்துப் பின்னணியில் சொல்லப்படும் கதை. அந்தப் பகுதியில் செல்வாக்காக இருக்கும் ஜி.கே.ரெட்டியிடம் அடியாளாக, ரவுடியாக வேலை பார்ப்பவர் நிவின் பாலி. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்குத் தொகை, கடன் தொகை வரவில்லை என்றால் அவர்களை மிரட்டி, அடித்து, உதைத்து பணத்தைப் பெறுவதுதான் நிவின் பாலியின் வேலை. சிறு வயதிலேயே நண்பன் செய்த கொலையை அவர் செய்ததாக நினைத்து போலீஸ் அவரைப் பிடித்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்தவர்தான் நிவின். பல வருடங்கள் கழித்து அந்தக் கொலையை செய்த நண்பன், ஊர் திரும்ப அந்த நண்பனைப் பழி வாங்கும் உணர்ச்சியில் நிவின் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இயக்கம்

ஒரு  ரீமேக் படத்தை இயக்கும் போது, அந்தப் படத்தை இந்த மண்ணுக்கான படமாகக் கொடுத்தால்தான் ரசிகர்களைச் சென்றடையும். இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் ஒரு தமிழ்ப் படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வை படத்தில் எங்குமே வெளிக்காட்டவில்லை. கதாபாத்திரங்கள் தமிழில் பேசிக் கொள்வதால் மட்டுமே ஓ…நாம் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப் படம் என்று ஞாபகம் வருகிறது.

நடிப்பு

கொஞ்சமும் ஒட்டாத அடியாள், ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி. ‘ரிச்சி’ மூலம் நேரடித் தமிழ்ழ்ப் படத்தில் அறிமுகமாகியுள்ள நிவின் பாலியைப் பார்க்கும் போது,  தெலுங்கிலிருந்து வந்த ‘ஸ்பைடர்’ மகேஷ் பாபு ஞாபகம் வந்து போகிறது. தாடி வைத்துக் கொண்டு, பீடா போட்டுக் கொண்டிருந்தால் மட்டும் தாதா-வாகிவிட முடியாது. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில், படத்தில் தமிழில் அறிமுகமாக வேண்டும் என ஏன் நினைத்தீர்கள் நிவின் ?.

நிவின் பாலியுடன் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும் கதாபாத்திரத்தில்தான் நட்டி நடித்திருப்பார் என்று பார்த்தால் அவருக்கும் முக்கியத்துவமில்லை. படத்தை முடிப்பதற்கு மட்டும் அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார். நிவின் பாலியுடன் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே பேசுகிறார். நட்டியின் காதலியாக லட்சுமிப்ரியா, நட்டிக்கே அதிகக் காட்சிகள் இல்லாத போது, அவருக்கு எங்கே இருக்கப் போகிறது. ஊர் பெரிய மனிதராக ஜி.கே.ரெட்டி, லட்சுமிப்ரியாவின் அண்ணனாக குமரவேல் அலட்டிக் கொள்ளாமல், யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். நிவின் பாலியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ், ஒரு நாளில் அவர் காட்சிகளை படமாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

இசை

அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை. பின்னணி இசையில் மட்டும் கவனம் ஈர்க்கிறார்.

படத்திற்கு +

அப்படி எதுவும் சொல்ல முடியவில்லை…

படத்திற்கு –

பிரபல நட்சத்திரங்கள் இருந்தும் எந்த ஒரு உணர்வும் இல்லாத கதை, திருப்பமில்லாத திரைக்கதை, புரியாத கதை சொல்லும் முறை..என பலவற்றைச் சொல்லலாம்.

Read Previous

சத்யா – விமர்சனம்

Read Next

‘டாக்டர் டூ ஆக்டர்’ சித்தார்த்தா சங்கர்