தமிழ் சினிமாவில், கதைகளைக் காப்பியடித்ததால் நடந்த சண்டைகளும், பஞ்சாயத்துகளும் நிறையவே நடந்திருக்கின்றன. அதில் பல விஷயங்கள் எந்த முடிவும் எட்டப்படாமலேயே அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கதைகளுக்கு எப்படி சண்டை நடந்ததோ, அதே போல சில தலைப்புகளுக்கும் சண்டைகள் நடந்துள்ளன. ஒரு படத்திற்கு தனி அடையாளத்தைத் தருவதே அந்தத் தலைப்புகள்தான்.
அப்படி ஒரு தலைப்பு சண்டை இப்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்த ‘களவாணி’ படம் 2010ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘K 2‘ படம் உருவாகும் ‘களவாணி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சற்குணம் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் மூலம் அறிவிப்பை வெளியிட்டார்.
‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அதற்கு ‘களவாணி 2’ என்றுதானே பெயர் வைக்க வேண்டும். ஆனால், ‘K 2’ என அவர்கள் வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ‘களவாணி 2’ என்ற டைட்டில் உரிமையை முதல் பாகத்தைத் தயாரித்த ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் நசீர் வைத்துள்ளார். அதனால்தான் ‘K 2’ என இயக்குனர் சற்குணம் அறிவித்துளளார்.
இப்போது முதல் பாகத்தைத் தயாரித்த ஷெராலி பிலிம்ஸ் நசீர், ‘களவாணி 2’ என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இது பற்றி அவர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“எனது தயாரிப்பு நிறுவனமான ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘களவாணி’ மற்றும் ‘எத்தன்’ படங்களுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றிப் படங்களாக்கிய உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
தற்போது பூணம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் ‘வதம்’ எனும் படத்தை தயாரித்து வருகிறேன். இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.
மேலும் விரைவில் ‘களவாணி 2’ படத்தைத் தயாரிக்க உள்ளேன். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரம் விரைவில் தெரிவிக்கிறேன். ‘களவாணி 2’ படத்திற்கான படத் தலைப்பின் உரிமையைத் தயாரிப்பாளர் சங்கத்தில் 17/01/2018 அன்று முறையே பதிவு செய்து ஒப்புதல் பெற்றுள்ளேன்.
எனக்கும் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் உங்களது ஆதரவைத் தொடர்ந்து நல்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்,” என அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனால், ‘K 2’ படக்குழுவினர் இனி, அந்தப் படத்தை ‘களவாணி 2’ எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.