ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’

தனுஷ் நடித்த “துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3” ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் அடுத்த தயாரிப்பாக கஸ்தூரிராஜா இயக்கும் ‘பாண்டி முனி’ படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தில் முனி என்கிற அகோரி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி ‘பாண்டி’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல் நடிக்கிறார். பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா இயக்கும் 23வது படம் இது. படம் பற்றி அவர் கூறியதாவது,

“இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும், காதலையும், குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் ‘பாண்டி முனி’.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும்.

இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்குக் கிடைத்த முதல் வெற்றி.

படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது,” என்றார் கஸ்தூரிராஜா.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, மது அம்பாட் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

மதுரையில் விறுவிறுப்பாக நடக்கும் ‘நாடோடிகள் 2’ படப்பிடிப்பு

Read Next

‘நரை’ – வயதானவர்களை வைத்து ஒரு ஹீரோயிசம்