‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என படத்தின் தலைப்பிலேயே ஒரு ஈர்ப்பைத் தந்த இயக்குனர் மு.மாறன், படத்திலும் அந்த ஈர்ப்பை ஆரம்பம் முதல் கடைசி வரை தந்திருக்கிறார்.
மர்ம நாவல்களைப் படிக்கும் போது நம் மனதிற்குள்ளும் ஒரு காட்சிகள் ஓடும். இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற பரபரப்பு காட்சிக்குக் கட்சி இருக்கிறது.
கால் டாக்சி டிரைவராக இருக்கும் அருள்நிதியும், நர்சாக வேலை பார்க்கும் மகிமாவும் காதலர்கள். மகிமாவுக்குத் தெரிந்தவரான சாயா சிங்கை, அஜ்மல் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார். அந்த வீடியோவை எடுப்பதற்காக அஜ்மல் வீட்டிற்கச் செல்கிறார் அருள்நிதி. ஆனால், அந்த வீட்டில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அதே சமயம், அருள்நிதிதான் அந்தக் கொலையை செய்தார் என போலீஸ் அவரைத் துரத்துகிறது. போலீசிடமிருந்து தப்பிக்கும் அவரை உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
யதார்த்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் அருள்நிதி. இந்தப் படத்திலும் கால் டாக்சி டிரைவராக மிகவும் கூலாக நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கி தப்பித்த பிறகு கொலைகாரனைக் கண்டுபிடிப்பதில் அந்தப் பதட்டத்துடன் பரபரப்புடன் நடித்திருக்கிறார்.
அருள்நிதியின் காதலியாக மகிமா நம்பியார். புன்னகை தவழும் முகத்துடன், பக்கத்து வீட்டுப் பெண் போல அழகாக இருக்கிறார். இருவரையும் ஏற்கெனவே காதலர்களாக காட்டிவிட்டதால் படத்தில் தேவையில்லாத காதல் காட்சிகள் இல்லை.
வித்யா, சுஜா வருணி இருவரையும் பயன்படுத்தி பெரிய மனிதர்களை சிக்க வைத்து பணம் பறிக்கும் வில்லத்தனத்தை செய்பவராக அஜ்மல். மற்ற கதாபாத்திரங்களில் ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ஜான் விஜய் அஜ்மல் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் சபலக்காரர்களாக நடித்திருக்கிறார்கள். சாயா சிங்கின் கதாபாத்திரம் எதிர்பாராத திருப்பத்துடன் அமைந்திருக்கிறது.
சாம் சிஎஸ் பின்னணி இசையில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகளில் கூட இயல்பான ஒளி அமைப்பைக் கொடுத்திருக்கிறார் அரவிந்த்சிங்.
இடைவேளைக்குப் பின்னர் வரும் திருப்பம் மேல் திருப்பம் தரும் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அடுத்தடுத்து அவை வருவதால் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.