முழுநீள நகைச்சுவையுடன் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பில் வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறுகையில்,

“30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இதுதான் திரைப்படத் தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம். நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது.

உலகளாவிய பார்வையாளர்களுக்கு ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

படத்தின் நாயகன் வீரா படம் பற்றி கூறியதாவது,

“ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவைப் படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்,” என்றார்.

இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் கூறுகையில்,

“நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ‘ராஜதந்திரம்’ படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்குதான் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’வின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப் பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையைக் கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி.

இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையைச் சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதுதான் இந்தப் படம்,” என்றார்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

Adanga Maru – Teaser

Read Next

திரைப்படம் ஆகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

Most Popular