மேற்குத் தொடர்ச்சி மலை – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சில படங்கள்தான் தங்களது தடத்தை தரமாகப் பதிய வைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு தரமான படம்தான் இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.

சமீப காலங்களில் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட மற்ற படங்களைக் காட்டிலும் இந்த மலை உச்சியில்தான் நிற்கிறது.

100 வருட தமிழ் சினிமா வரலாற்றிலும், தங்களது முதல் படத்தையே பெருமை மிக்க படமாகக் கொடுத்ததிலும் இயக்குனர் லெனின் பாரதி  எப்போதும் பேசப்படுவார்.

படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ஒரு சினிமாவைப் பார்க்கிறோம் என்ற உணர்வு நிச்சயம் ஏற்படாது. படத்தின் நாயகன் ரங்கசாமியின் தோழனாய், அவர் கூடவே நாமும் கை கோர்த்துக் கொண்டு பயணிப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது.

திரையில் அப்படிப்பட்ட ஒரு மாயத்தைப் புரிய வைக்க இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன், கலை இயக்குனர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கும், காமிரா முன் முதன் முறையாக தங்களது நடிப்பை மிக மிக இயல்பாய் பதிவு செய்த அந்த ஊரின் நிஜ முகங்களுக்கும் மிகப் பெரிய பங்குண்டு.

தொழிலாளியாய் இருக்கும் ரங்கசாமி (ஆண்டனி), ஒரு சிறிய நிலம் ஒன்றை வாங்கி தானும் விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கான முயற்சியில் இறங்கியவருக்கு காலம் எப்படிப்பட்ட முடிவை வழங்கியது என்பதுதான் இந்த ‘மேற்குத் தொடரச்சி மலை’.

ரங்கசாமியாக ஆண்டனி, அவரது மனைவி ஈஸ்வரியாக காயத்ரி கிருஷ்ணா, தோழர் சாக்கோ-வாக ஆபு வலயங்குளம், கங்காணி  அந்தோணி வாத்தியார், ஊத்து ராசா ரமேஷ், கணக்குப்பிள்ளை சுடலை, வனகாளி பாண்டி, கிறுக்கு கிழவி பாண்டியம்மா, அடிவாரம் பாக்கியம் சொர்ணம், சுருளி ஸ்மித் என ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த ஒரு இடத்திலும் அது நடிப்பு என்பதை வெளிப்படுத்தாமல், அந்தந்த கதாபாத்திரங்களாகவே இன்னமும் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பற்றி எப்போது நினைத்துப் பார்த்தாலும் அவர்களது கதாபாத்திர முகங்கள்தான் நம் ஞாபகத்திற்கு வரும்.

இம்மாதிரியான படங்களுக்கு இளையராஜாவின் இசை சேர்ந்தால் அது இன்னும் கூடுதலான பரிமாணத்தைக் கொடுக்கும். தன் இசையாலும் படத்தை இன்னும் உயரத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்.

கமர்ஷியல் சினிமாக்களும் தேவைதான். கமர்ஷியல் ஹீரோக்களும் தேவைதான். அதே சமயம் தங்கள் அபிமான நாயகர்களின் கட்-அவுட்டுகளுக்குப் பால் ஊற்றி பட வெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள், இந்த மாதிரியான படங்களையும் ரசித்துப் பார்த்து ஆதரவு கொடுத்தால் மேலும் பல நல்ல படங்கள் வந்து தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்து இன்னும் உச்சிக்குக் கொண்டு போகும்.

படத்தைத் தயாரிக்க முன்வந்த விஜய் சேதுபதி, படத்தின் இயக்குனர் லெனின் பாரதி இருவரும் இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யால் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பேசப்படுவார்கள்.

Read Previous

500 தியேட்டர்களில் வெளியாகும் ’60 வயது மாநிறம்’

Read Next

அருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ டிரைலர்

Most Popular